குடும்பம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கத்துவத்தினரை கொண்டு நிர்வகிக்கப்படும் அமைப்பென அடையாளப்படுத்த முடியும். குடும்பம் என்பதை உறவுகளின் ஆலையம் என்று கூட அழைக்கலாம், பொதுவாக அன்பு என்ற சங்கிலியால் ஒன்றினைக்கும் இனிய உறவுகளின் சங்கம் குடும்பம் மட்டுமே.
சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 16(3)ஆவது விதி குடும்பத்தைப் பற்றிக் கூறும்போது, “குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையானது, அடிப்படையானதுமான குழுவாகும். அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்க படுவதற்கு தகுதி வாய்ந்துள்ளது” The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State)” என்கிறது. குடும்பம் இயற்கையானது என்பதன் பொருள், உலகில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் முன்னர் உருவானது தான் குடும்பம் என்ற கட்டமைப்பு, அது காலா காலம் இயற்கையாக இருந்து கொண்டே இருக்கும்.
குடு (கொடு )+ இன்பம் என்பதன் சுருக்கமே குடும்பம் என்பதால் இன்பத்துக்கு பஞ்சமில்லாத அன்பு பரிமாறப்படும் உறவுகளின் சங்கமமாகவே குடும்பம் என்ற உறவாக திகழ்கிறது.
கணவன் மனைவி என்ற உயர்ந்த உறவே ஒரு குடும்பத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. மனைவிக்கு கணவன் மீது மிகுந்த மரியாதையும், பணிவும் கணவனுக்கு மனைவி மீது நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இல்லம் என்றும் இனிய சொர்க்கமாக திகழும். நல்ல குடும்பம் என்பது அந்த குடும்பத்தில் அங்கம் வகிக்கும் எல்லோருடைய அயராத உழைப்பின் பிரதிபலன். சிறந்த குடும்பம் எப்போதும் சக அங்கத்துவத்தை சரி வர புரிந்து அனுசரித்து செல்லக்கூடிய சிறந்த தலைமைத்துவத்தில் தங்கியுள்ளது.
குடும்பம் – ஒரு அமானிதம்
குடும்ப தலைமைத்துவம் என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பு என்று சொல்வதை விட, குடும்பத்துக்கான முறையான பாதுகாப்பு நடவடிக்கை என்பதே உண்மை. குடும்ப தலைமை என்பது அரச அதிகாரம் போன்ற பதவி அல்ல. அதிக பொறுப்புள்ள பதவி என்பதே பொருள். குடும்ப எதிர்காலம், குடும்ப வெற்றி அதோடு சேர்த்து குடும்பத்திற்காக சிறந்த வளங்களை உருவாக்குதல் போன்ற மிகப்பெரிய பொறுப்புகளை உள்ளடக்கிய ஒரு அமானிதம், அதைப் பற்றி அல்லாஹ் நாளை மறுமையில் ஒவ்வொரு தலைவர்களையும் விசாரிப்பான் என்ற உணர்வோடு ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு !!
ஒரு குடும்பத்தில் எவரெல்லாம் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வால் வகுக்கப்பட்ட நியதி, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைமையின் கீழ் குழந்தைகள் உட்பட சக உறவுகள் உருவாக்கப்பட்டு குடும்பம் என்ற மிகப்பெரிய ஆலமரம் அன்பு எனும் வேரில் உருவாகி குழந்தைகள் என்ற கிளைகளைக் கொண்டு குடும்பம் விஸ்தீரணமடைகிறது. எனவே குழந்தைகள் சரியாக வளர்க்கப்படா விடின் அவர்கள் சமூகத்தின் நச்சு மரங்கள் மாறுகின்றனர். குடும்பத்தை விஸ்தீரணப்படுத்தும் செல்வங்களாக அல்லாஹ்வால் எமக்கு வழங்கப்பட்ட குழந்தைகள் விஷயத்தில் அதிகூடிய கவனமும் பொறுப்பும் எமக்கு இருக்க வேண்டும். தொலைபேசியின் தொடு திரைகளில் தொலைந்து போகிறார்கள் இன்றைய குழந்தைகள் என்பது எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும்?
மனித வாழ்வில் குடும்ப அமைப்பு மிக முக்கியமானது, பெற்றோரை இழந்ததால் அந்த அமைப்பை விட்டும் வெளியேறிய குழந்தைகளே இன்று அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள், குடும்பம் என்ற ஒரு அமைப்பு உயர்ந்த பல்கலைக்கழகம் என்று கூட கூற முடியும், புத்தகங்களோ பேராசிரியர்களோ சொல்லிக் கொடுக்க முடியாத பெரிய கல்வியை அது கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதில் பாடம் போதிப்பவர்கள் சில நேரம் பட்டதாரிகளல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களின் அறிவு மிகவும் விசேஷமானது ஏனெனில் அது அவர்களின் கல்வி மற்றும் அனுபத்தில் பெறப்பட்ட தனித்துவமிக்க பாடங்கள் !! தங்களின் மாணவர்களாகிய குழந்தைகளுக்கு தூய்மையான பாசத்தோடு பாடம் சொல்லிக்கொடுக்கும் முதன்மை ஆசிரியர்கள் பெற்றோர்களே !!
ஒரு சமூகத்தின் ஆரம்ப கட்டமைப்பு குடும்பம் என்ற விதையிலிருந்து உருவாகிறது, சமூக மாற்றம் அல்லது சமூக முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. எனவே குடும்பம் என்ற கட்டமைப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட நாம் குடும்பம் என்ற குழுவை அல்லது அமைப்பை வழிநடத்தி வெற்றி பெற சில அடிப்படை 4 இலக்குகளை நோக்குவோம்.
1. மறுமை வாழ்வு
குடும்ப கட்டுக்கோப்பில் முக்கியம் வாய்ந்த முதல் விடயம் தொடர்பாக அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது
قوا انفسكم وأهليكم نارا
“உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவனின் முதல் இலக்கு தனது குடும்பத்தின் மறுமை வாழ்வுக்கான வெற்றியை உறுதி செய்வது மட்டுமே. இதில் குடும்ப தலைமையின் ஒவ்வொரு செயட்பாடும் குழந்தைகளுக்கான முன்னுதாரமாக திகழ்கிறது, தாய் மற்றும் தந்தையின் நடத்தையில் இருந்தே குழந்தைகள் தமக்கான பாதையை உருவாக்கிக் கொள்கிறார்கள், பெற்றோர்கள் தொழுகையை நிறைவேற்றாமல் குழந்தைகள் தொழுவதை எதிர்பார்க்க முடியாது. இது போன்றே சகல விடயங்களையும் நோக்க முடியும். எனவே இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்டு குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் தமது மறுமை வாழ்வின் வெற்றியை அடைய முடியுமான வகையில் வாழ்கிறார்களா என உறுதி செய்வது குடும்ப தலைமை உட்பட ஏனைய உறவுகளின் பொறுப்பாகும்.
2. கல்வி
குடும்ப நிர்வாகத்தின் இரண்டாவது குறிக்கோள் கல்வியாகும், கல்வி என்பது பல விடயங்களை உள்ளடக்கிய ஒன்றாகும் ஆனால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதோ ஒரு துறை சார்ந்த கல்வியில் பயணிப்பது கட்டாயமானதாகும், ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் கல்வி என்ற பார்வையில் சரி சமமானவர்களே, குடும்ப நிர்வாகம் இந்த விஷயத்தில் அதி கூடிய கவனம் எடுப்பது மிகவும் முக்கியமாகும், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு துறையில் சரியான பாதையில் முறையாக பயணிக்கிறார்களா என்று அடிக்கடி சோதித்துப் பார்ப்பது அக்குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய முக்கிய பொறுப்பாகும்.
கல்வி என்ற இலக்கை அடைய தவறும் பட்சத்தில் வாழ்க்கையில் நிறைய இலக்குகள் தவறிவிடுகிறது, ஏனெனில் கல்வி என்பதன் (Output) பிரதிபலன் காசு எனும் பொருளாதாரத்தை அதிகமாகவே தருகிறது, அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் “கல்வி காசு தரும்”, “படிப்பு பணம் தரும்” என்ற இரண்டு வாசகங்களும் எனது வாழ்வில் கண்ட நிஜம் என்பதால் எல்லோருக்கும் இதனையே சொல்வது வழக்கம்.
இன்றைய நமது குழந்தைகள் கல்வி என்ற இலக்கை விட்டு விட்டு வேறு திசைகளில் காணாமல் போகிறார்கள் ஆனால் கவலை என்னவென்றால் கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள் கண் மூடி இருப்பது தான்.
அன்பு தம்பி தங்கைகளே! வாழ்வின் உண்மையான சுவை அறிய வேண்டுமெனில் கல்வி எனும் இலக்கை அடைந்து பாருங்கள், உங்களுக்கென ஒரு தனி யுகம் பிறக்கும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கல்வி எனும் இலக்கு கட்டாயமாக்கப்படல் வேண்டும், “படிப்பை பாதியில் நிறுத்தி பணம் சம்பாதிக்க தீர்மானித்தேன்” என்று சொல்லும் தொடர்கதை முற்றுப் பெறட்டும். குடும்ப தலைவர்களே! அதற்காக கொஞ்சம் விழிப்போடும் பொறுப்போடும் செயல்படுங்கள். கல்வியை கை விட்டதால் வந்த கஷ்டங்களை கண்டிப்பாக உங்களின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குடும்பத்துக்கான கல்வி தொடர்பான இலக்குகள் என்ன என எல்லோரும் பேசி நிர்ணயம் செய்து கொள்ளுங்கள், இந்த இலக்குகளை அடைந்துகொள்ள அயராது உழைப்போம். இப்படி நாம் முன்னர் செயற்பட்டிருந்தால் இன்று எமது பிரதேசத்தில் பல மேதைகளை உருவாக்கி இருக்க முடியும்.
3. ஆரோக்கியம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி அதாவது உடல் ஆரோக்கியம் என்பது நமது வாழ்வுக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும். இஸ்லாமிய வாழ்வியல் முறைகளை பார்க்கும் போது ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை பல இடங்களில் இஸ்லாம் வலியுறுத்துவதை காண முடிகிறது. பொதுவாக ஆரோக்கியத்தால் மட்டுமே நோயற்ற வாழ்வை ஈட்டித்த தர முடியும், அதே போன்று மேலே குறிப்பிட்ட இரண்டு இலக்குகளையும் அடைந்துகொள்ள உடல் ஆரோக்கியம் இன்றியமையாத ஒன்றாகும்.
மறுமைக்கான வெற்றியை உறுதி செய்யும் நல்லமல்களை செய்ய நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதே போன்று கல்வியின் மூலம் பயன் பெற அல்லது பெற்ற பயனை அனுபவிக்க நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பொதுவாக உலகில் வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் அவசியமே!
உடலின் ஆரோக்கியத்தை பாழாக்கும் நச்சு உணவுகளை முழுமையாக நிறுத்தி குடும்ப ஆரோக்கியம் தொடர்பான சரியான நடைமுறைகளை கடைபிடிக்க குடும்ப தலைவர் முன் வர வேண்டும். வரும் முன் காப்பதே மிகச்சிறந்த மருந்து, இன்று பொதுவாக எல்லாக் குடும்பங்களையும் வெகுவாக தாக்கி அழித்துக் கொண்டிருக்கும் நீரிழிவு / சர்க்கரை நோய் என்பது நமது சீரற்ற உணவுப்பழக்கத்தால் உருவாகிறது என்று தெரிந்தும் “எனக்கு ஒரு நோயும் இல்லை” என்ற வாதத்தோடு வாழ்கிறோம். ஆனால் எனக்கு அந்த நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்ட குடும்பங்கள் எத்தனை?
இன்று நம்மிடம் இருக்கும் வெள்ளை சீனியும் வெள்ளை மாவும் கட்டாயம் நம் எல்லோருக்கும் சர்க்கரை வியாதியை தானம் செய்தே தீரும் என்ற நிலையை அன்றாடம் படிக்கிறோம் ஆனால் நாம் அவை இரண்டை மட்டுமே உயிர் வாழ தேவையான உணவு என்று நம்பி இருக்கிறோம்!! உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவு பழக்கம் முழுமையாக நிறுத்திக் கொள்ளும் முயற்சியை குடும்பமாக ஓன்று சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதே நேரம் நம்மை இயல்பாக பீடிக்கும் நோயிலிருந்து நிவாரணி பெற்றுக் கொள்ள எம்மிடம் எப்படியான திட்டங்கள் உள்ளன என சிந்திக்க வேண்டும், அதில் மிக முக்கியமாக பொருளாதார ஏற்பாடுகள் பற்றி சரியான தீர்மானங்களை முன் வைத்து திட்டமிடல் அவசியமாகும்.
4. பொருளாதாரம்
மேலே நாம் சொன்ன மூன்று இலக்குகளையும் இலகுவாக அடைந்துகொள்ள இன்றியமையாத விடயமே இந்த பொருளாதாரம்!! ஆனால் கடந்த பல தசாப்த காலங்களாக எமது வாழ்வில் சிறிதளவேனும் முன்னேற்றம் அடையாத ஒரே விடயம் இந்த பொருளாதாரம் மட்டுமே !!
பணத்துக்காக பாதியில் படிப்பை நிறுத்தியவரும் இரவு பகலாக கண்விழித்து கஷ்டப்பட்டு படித்தேன் என்பவரும் இன்று ஒரே இடத்தில் இருப்பதைக் காணும் போது ஏதோ ஒரு இடத்தில் தவறு நடக்கிறது என்பது புரிகிறது. கல்வி என்பது பாடசாலை புத்தகங்களோடு மட்டும் சுருங்கி விட்டதன் விளைவே இன்றைய அதிகமான இளைஞர்களின் வாழ்வு அவர்களை அறியாமலே தடை பட்டு நிற்கிறது.
உண்மை என்னவெனில் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்கள் கல்வி என்ற ஒன்றில் மட்டுமே இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நாம் படித்து தெரிந்து கொண்ட அறிவைக்கொண்டு பணத்தை எம்மால் ஈட்ட முடிகிறது என்ற தத்துவத்தை தெளிவாக புரிந்து கொள்ள முயற்சிப்போம் அப்போது தான் கற்றுக்கொள்வதில் ஒருபோதும் கஞ்சத்தனம் ஏற்படாமல் இருக்கும்.
உலகத்தில் எந்தத் தொழிலை நீங்கள் எடுத்தாலும் அங்கு கல்வி, அறிவு (Knowledge) என்ற மூலதனம் முதல் இடத்தில் இருப்பதை காண முடியும். எனவே உங்களது குடும்ப உறவுகளின் இரண்டாவது இலக்கான கல்வியே இந்த பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதில் அமோக செல்வாக்கு செலுத்துகிறது.
எம்மில் அதிகமானவர்கள் ஏழைகளாகவே நிலைத்திருப்பதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் அந்தக் காரணங்களை கண்டறிவதற்கு எமக்கு நேரமில்லாமல் இருக்கிறது, வளர்ச்சியடைந்த நாடுகளை ஏன் நாம் பார்ப்பது கிடையாது? நான் சிறுவனாக இருந்த போது அரேபியர்களை ஆடு மேய்ப்பவர்கள் என்றார்கள் வெள்ளைக்காரர்களை மூலையில்லாதவர்கள் என்றார்கள், நாட்கள் நகரும் போது புரிந்து கொண்டேன் நம்மவர்களில் பாதிப்பேர் அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்கிறார்கள் மீதிப்பேர் அரபிகளுக்கு பணியாற்றுகிறார்கள். அதே நேரம் வெள்ளைக்காரர்களின் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய எமது கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொண்ட போது வியந்து போனேன்.
அடுத்த நாட்டவர்கள் வடிவமைத்த பொருட்களை பயன்படுத்துவதில் பெருமைப்படும் (consumer) பயனாளிகளாக வாழ்ந்து விட்டு செல்கிறோம் ஆனால் நாம் உற்பத்தி செய்யும் அளவுக்கு ஒரு விடயத்தையும் நினைத்தது கிடையாது. சீனர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் பொருளாதார முன்னேற்றத்தில் கடந்த 30 ஆண்டுகளாக உலகின் முதலிடத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய அமீரகத்தை (UAE) பாருங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் அங்குள்ள எவரும் வாழவில்லை ஆனால் நம்மில் அதிகமானவர்கள் காலா காலம் அப்படித் தானே வாழ்கிறோம், நாம் எப்போது முன்னேறுவது? அல்லது நாம் முன்னேறாமல் இருப்பதன் காரணம் என்ன என்றாவது யோசித்ததுண்டா?
பொருளாதாரம் மட்டுமே எமது வாழ்வின் அனைத்து விடயங்களையும் சரி வர தூக்கிப்பிடிக்கும் தூண் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “பணத்தை தேடி அலைய வேண்டாம்”, “பணத்தின் மீது மோகம் வேண்டாம்”, “பணம் பணம் என்று அலைய வேண்டாம்” என்று புத்திமதி சொல்லும் நிறைய பேரை பார்த்திருப்போம் ஆனால் அவசரத்துக்கு ஒரு சிறு தொகைப் பணம் கூட அவர்களால் பிறருக்கு கொடுக்க முடியாத நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.
பிறரிடம் வாங்கும் கரத்தை விட பிறருக்கு கொடுக்கும் கரமே சிறந்தது என்பதை இஸ்லாம் சொல்லித்தருகிறது, தான தர்மங்களை தாராளமாக வழங்க ஊக்குவிக்கிறது, பொருளாதாரத்தை சுத்தம் செய்ய ஸகாத் கொடுப்பதை கட்டாய கடமையாக்கியுள்ளது அதே போன்று இந்த சகாத் மற்றும் ஹஜ் கடமையை இரண்டையும் இஸ்லாத்தின் தூங்ககளில் சேர்த்துள்ளது. ஆனால் பரம ஏழையாகவே வாழ்வோம் என்று நினைப்பவர்கள் இந்த விடயங்களில் வெகுதூரம் இருக்கிறார்கள்.
ஏழையாக பிறந்துவிட்டோம் என்பதால் நாம் ஏழையாகவே வாழ வேண்டும் என்பது விதியல்ல, நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்க குறைந்த பட்சம் சிந்தனையாவது செய்ய வேண்டும்.
எனவே குடும்ப தலைவர்களே, தயவு செய்து இந்த விடயங்களில் கொஞம் அக்கறை காட்டுங்கள் எமது அடுத்த தலைமுறையினரை தலைவர்களாக மாற்றுவோம் !!
நன்றி
A. R. Muzammil BSc (Hons), MPA&M