Google மற்றும் ஆல்பாபெட் நிறுவன CEO பதவிக்கு உயர்ந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2020-ம் ஆண்டில் பட்டம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றினார்.

பட்டதாரி இளைஞர்கள், பார்வையாளர்கள் எவரும் இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் பேசுவது வித்தியாசமான அனுபவம். ஆனால், அது உங்கள் எல்லோர் மத்தியிலும் சென்று சேர உதவியாக இருப்பது இன்றைய தொழில்நுட்பம் என்று தனது பேச்சை தொடங்கினார் சுந்தர் பிச்சை.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

எப்போதும் திறந்த மனதுடன் இருங்கள், பதற்றமாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். இளைஞர்கள் பலரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மீது வெறுப்படைந்துள்ளனர். இதனால் பொறுமை இழந்துள்ளனர். ஆனால் பதற்றமாக இருப்பது புதிய வழியைக் காட்டும். இதுவே அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புரட்சிக்கு காரணமாக அமையும். தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள் எதுவும் இந்த தலைமுறையினர் எதிர்பார்த்தது கிடையாது. ஆனால் முந்தைய தலைமுறையினர் உருவாக்கும் தொழில்நுட்பவளர்ச்சி அடுத்த தலைமுறையினருக்கு அடித்தளமாக அமையும்.

“தற்போதைய சூழ்நிலையில் பொறுமையற்று இருப்பது மிகவும் அவசியம். அதுதான் இந்த உலகுக்குத் தேவையான வளர்ச்சியை தருவதாக இருக்கும். எங்கள் தலைமுறையினரின் வெறுப்புக்கு பிரதான காரணம் பருவநிலை மாற்றமாகும். அல்லது கல்வி முறையாகவும் இருக்கலாம். அதேபோல உங்கள் தலைமுறையினர் அமைதியற்று இருப்பது புதிய நுட்பத்துக்கு வழிவகுக்கும். அதுவே உலகம் விரும்பும் வளர்ச்சியை உங்களுக்குத் தருவதாக இருக்கும்.

கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு அதில் இருந்துதான் மக்கள் மேம்பட்டு வந்துள்ளனர்.

தொழில் நுட்பத்தின் மீதிருந்த தீராத ஆர்வம்தான் இந்தியாவில் இருந்து என்னை கூகுள் வரை நகர்த்தி வந்துள்ளது. அதற்கு திறந்த மனதுடன் இருந்ததும் ஒரு காரணம். இந்த உலகில் தங்களை ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் மீது இளைஞர்கள் கவனம் செலுத்தினாலே அதில் அவர்கள் வளர்ச்சியை எட்ட முடியும். உங்கள் பெற்றோர் விரும்புவதை செய்வதைக் காட்டிலும், உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈடுபடுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார்.

By Admin

Leave a Reply