பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது. அந்த புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையை கடந்தது. அப்போது அதிகபட்சமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதே போல் மின்டனார் மாகாணத்தையும் புயல் தாக்கியது. அங்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன.

பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சியார்கோ, சூரிகாவோ ஆகிய பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.  மீட்பு பணியில் ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, கடலோர காவல் படை ஆகியவற்றை சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.

இது குறித்து துணை ஆளுநர் நிலோ டெமெரி கூறும் போது, சூறாவளி புயல் சியோர்கோவுக்கு அருகில் உள்ள தீவை தாக்கி அழித்துள்ளது. அங்கு 6 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்தார். (Thinaboomi)

By Admin

Leave a Reply