சிறார்களே!
பலஸ்தீன, சிரிய, ரோஹிங்கிய
பிஞ்சுகளே!
உங்கள் சாபம் தான்
உலகையே இன்று
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது.
உங்கள் விண்ணப்பம்
முறையீடாய் இறைவனின்
நீதிக் கதவைத் தட்டியுள்ளது!

உங்களை கண்டு கொள்ளாத
மனசாட்சியற்ற மானுட மாக்களை
மடக்கிப் போட்டுள்ளது
மண்டியிட வைத்திருக்கிறது!

உங்களை வைத்து
அரசியல் செய்த அரக்கர்களும்
கஜானா நிரப்பிய முதளைகளும்
கபடமாடிய கயவர் கூட்டமும்
இறைவன் நீதிமன்றில்
கைகட்டி முழந்தாளிட்டு நிற்கின்றனர்!

உங்களின் அழு குரல்
படைத்தவனின் பார்வையில்
சுயநல மானுடத்தை
சமநிலைக்கு ஆக்கியுள்ளது!

நீங்கள் அனுபவித்த அச்ச உணர்வு
எப்படியானது என்பதை
உலகமே இன்று உணர்கிறது!

யாரும் பார்க்காமல்
உங்களைக் கை விட்டது போலவே
இன்று உலகமே கைவிடப்பட்டுள்ளது.
இறைவன் நீதி தவறாதவன்! என்பதை ஞாபகமூட்டி விட்டான்
அவன் நின்றே பிடிப்பான்.
பிடித்து விட்டான்!

அதில் இழையோடிய
பெருமையும் பகட்டும்
முகஸ்துதியும்
புகழ்ச்சியும் பம்மாத்தும்
தனக்குத் தேவையில்லை
என்பதை அல்லாஹ் பிரகடனம்
செய்துவிட்டான் !.!

உங்களை அலைய விட்ட
அரசுகளும் ஆட்சிகளும்
பார்த்தும் அலட்டிக் கொள்ளாத
அதாகார வர்க்கமும்
மரணப் பீதியில்
உறைந்து கிடக்கின்றது.

இப்போது எல்லாரும்
உங்களைப் போலல்ல
அதைவிட கேவலமாக
பாடசாலை இருக்கிறது
ஆனால் போக முடியாது!
வாகனம் இருக்கிறது
ஆனால் பயணிக்க முடியாது!
பாதைகள் இருக்கிறது
ஆனால் பாதம் வைக்க முடியாது!

தாயன்பிலும் தந்தை பாசத்திலும்
சுதந்திர பறவைகளாய்
சுற்றித் திரிந்த உங்களை
கூட்டைப் பிரித்து
திக்குத் தெரியாமல்
ரோட்டில் விட்டு
நிர்க்கதியாக்கிய அந்த
அதிகார வர்க்கத்தை ….

நீங்கள் மன்னிக்காது வரை
விடிவு வருமென்று
நான் நினைக்க வில்லை!!

உங்களைக் கண்டு கொள்ளாத
உங்கள் பசி உணராத இவ் உலகில் நானும் ஒருவள் ஆகவே
செல்லங்களே என்னை மன்னித்திடுங்கள்!
BY: Maheesa Riyas

Leave a Reply