சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து ஹாங்காங் புறப்பட்டது டைமண்ட் பிரின்சஸ் கப்பல். பின்னர் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜப்பானுக்கு வந்த அந்த கப்பலுக்கு பிப்.1-ம்தேதி அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு கரோனா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் மேலும் 273 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் மேலும் 41 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதன்காரணமாக சுமார் 3,000 பயணிகளுடன் ஒகினாவா மாகாணம் அருகே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் மேலும் சிலருக்கு இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் அவர்களுக்கான தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, கப்பலுக்குள் நடமாடவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -Nakiran News-