கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மேற்க்கொள்ளப்படும் ஊரடங்கானது சில சந்தர்ப்பங்களில் அத்துமீரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 65,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் 18,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுமிருந்த நிலையில் , மார்ச் 20 முதல் மே 27 வரையான முழுநேர ஊரடங்கு காலப்பிரிவில் தாம் தவறாகக் கைது செய்யப்பட்டதாக ஏராளமான முறைப்பாடுகள் தமக்குக் கிடைததுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு நடமாட்டத்தைக் குறைப்பதற்காக 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் சட்டம் பொலிஸாரால் பிரயோகிக்கப்பட்ட போதும் ஊரடங்குச் சட்டம் சட்டரீதியானதல்ல எனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, தனிமைப்படுத்தலுக்கும் நோய்க்கட்டுப்பாட்டுக்குமான கட்டளைச் சட்டம், முற்காப்பு நடவடிக்கைக்காக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.