Pudawaikkattu Old School

புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, திரியாய் இப்படி அண்மித்த பிரதேச வாழ் மக்களில் அதிகமானவர்கள் இத்தொழிச்சலையில் பணிபுரிய பெரிதும் விரும்பும் அளவுக்கு இதனது வளர்ச்சி மற்றும் சேவை பரவலாக பேசப்படுகிறது. இல்மனைட் (ILMENITE), ரூட்டைல் (RUTILE), சிர்கோன் (ZIRCON) மற்றும் உயர் தர இல்மனைட் ( HI-TI-ILMENITE) போன்ற பிரதான நான்கு வகையான முக்கிய மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெகுவான இலாபத்தை முழு நாட்டுக்கும் பெற்றுக்கொடுக்கும் இது போன்ற பெரிய தொழிச்சலை ஓன்று எமது பிரதேசத்தில் இருப்பது எமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விடயமாகும். ஆனாலும் வருத்தப்படக்கூடிய வகையில் புடவைக்கட்டு கிராம பகுதியில் தொடர்ச்சியாக நடந்தேறும் சில விடயங்கள் அப்பகுதி மக்களில் மனங்களை வெகுவாக பாதித்திருப்பது தெரியவருகிறது.

  1. பிரதேசத்தின் கடல் பகுதி முழுவதுமாக மனலகழ்வு இடம்பெற்றுள்ளது, ஆனாலும் அதனை மீள்நிரப்பும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இதனால் மண்ணரிப்பு பல மடங்கு அதிகரித்து கடல் நீர் கிராமத்தை மூடும் நிலை உருவாகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
  2. பழைய பாடசாலை விளையாட்டு மைதானம் முழுவதுமாக மனலகழ்வு இடம்பெற்று முடிவுற்ற பின்னரும் வாக்களிக்கப்பட்ட மைதான புனர்நிர்மாணம் மற்றும் விளையாட்டு அரங்கம் தொடர்பில் இந்நிறுவனம் இதுவரை பாராமுகமாகவே இருந்து வருகிறது. இம்மைதானம் புனர் நிர்மாணம் செய்து தரப்படும் என குச்சவெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்களுக்கு எழுத்து மூலம் வாக்களிக்கப்பட்ட பிரதிகள் குச்சவெளி பிரதேச செயலாளர் உட்பட பல அரச தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தப்பயனும் இதுவரை கிட்டவில்லை!
  3. கிராமத்தின் ஒரு அடையாளமாகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் திகழும் பழைய பாடசாலை மற்றும் அதனது சுற்று வளாகம் இந்த நிறுவனத்தினால் கைப்பற்றப்பட்டு, பாடசாலை கட்டிடம் அகற்றப்படும் அபாயம் நிலவுகிறது. கட்டிடத்தை அடையாளமே இல்லாது செய்யும் ஆரம்ப வேலைகள் அவசரமாக மேட்கொள்ளப்பட்டுள்ள போதிலும் குச்சவெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்களைத் தவிர சம்பந்தப்பட்ட அரச தரப்போ பிரதேச அரசியல் பிரமுகர்களோ இது வரை அப்பிரதேச மக்களின் கண்களில் தென்படவில்லை என்பது பெரும் வேதனையை தோற்றுவிக்கிறது. அதை விட கொடுமை என்னவெனில் பாடசாலையின் பழைய மாணவர்களில் அநேகமானவர்கள் இதனை பராமரிக்கவோ பாதுகாக்கவோ முயட்சிகள் செய்யாது பாராமுகமாக இருப்பது தான் !! புடவைக்கட்டுக் கிராமத்தின் பூர்வீக முதல் பாடசாலை என்ற உயர்ந்த இடத்தை தக்கவைத்த பாடசாலையில் இது வரை எத்தனை மாணவ மாணவிகள் கல்வி கற்றிருப்பார்கள்? ஆனால் நன்றி மறந்த சுயநல மாணவர்களுக்கே நான் கற்றுக்கொடுத்துள்ளேன் என அப்பாடசாலை வெட்கி தலைகுனிந்து தனிமையில் நிட்கிறது
  4. பாடசாலை வளாகம் மற்றும் மைதானம் இரண்டுமே திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியின் இரு புறங்களிலும் அமையப்பெற்றுள்ளதால் மண்ணகழ்வின் பின்னர் இந்த வீதி முழுமையாக சேதமடையும் அபாயமும் காணப்படுகிறது. எனவே இந்நிறுவன பொறுப்புதாரிகளிடம் தயவாக கேட்டுக்கொள்வது எமது சமூகத்தின் கல்விசார் அடையாளத்தை தயவு செய்து அழித்துவிடாதீர்கள்!

குச்சவெளி, புல்மோட்டை மற்றும் திருகோணமலை அரசியல் பிரமுகர்கள் ! தயவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க முயட்சி செய்யுங்கள் !!

By Admin

Leave a Reply

You missed