ஹைதராபாத்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு பகுதியில் மக்களிடையே நூதமான ஒரு வியாதி தாக்கியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 290 பேர் இந்த மர்மமான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு கோதாவரி மாவட்டம், எலுரு பகுதியைச் சேர்ந்த மக்கள், திடீரென இப்படி ஒரு நிலைமை தங்கள் பகுதியில் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 2 தினங்களாக, அங்குள்ள பலரும் திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வலிப்பு நோய் வந்தது போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் படுக்கைகள் எல்லாம் நிரம்பியதால், நோயாளிகள் வரண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர் நோயாளிகளில் பலர் விந்தையான குரலில் கூச்சலிடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கவலைக்கிடமான நபர்கள் விஜயவாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். அப்பகுதியிலுள்ள குடிநீர் மாசுபாடு அடைந்து இப்படியான நிலை உருவானதா என்பதை அறியவும், உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறியவும், தண்ணீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்கட்ட தகவல்படி நீர் மாசுபாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. எனவே, நோயாளிகளின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஆந்திர மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும் விசாரித்து, பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிகிச்சையையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர மாநில மாநில சுகாதார ஆணையர் கட்டமனேனி பாஸ்கரும் எலுருவுக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டார்.

News by : OneIndia

By Admin

Leave a Reply