ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரிய வசம், துமிந்த திசாநாயக்க, பீ. ஹெரிசன் உள்ளிட்ட நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அமைச்சுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவுக்கு எதிராக அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 2015/-2018 காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் இறுதி அறிக்கை கடந்த திங்களன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.இதன் பிரதிகளை சட்ட மாஅதிபர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பவற்றுக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் புதிய கட்டடம் வாடகைக்கு பெற்றதில் பாதகமான ஒப்பந்தம் செய்ததால் 139.9 கோடி நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு அதிகார சபைக்கு 2,500 ஊழியர்கள் மேலதிகமாக இணைத்ததால் 64 கோடி நிதி துஷ்பிரயோகம் இடம் பெற்றீள்ளது.வீடமைப்பு கிராம பிரசாரங்களுக்கு 04 கோடி செலவிட்டதில் மோசடி நடந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுநிருபங்களுக்கு முரணாக நெடுஞ்சாலை அமைச்சிற்கு பொதுமக்கள் இணைப்பு அதிகாரிகளாக 130 பேரை நியமித்ததால் 06 கோடிக்கு நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகங்களில் தமது புகைப்படத்தை அச்சிடுவதற்கு ஆலோசனை பெற 390 இலட்சம் விரயம் செய்தது,மடிக்கணனி வழங்கும் திட்டத்திற்கு 111 கோடி துஷ்பிரயோகம் செய்தது,பசு மாடுகள் கொள்வனவில் மோசடி நடந்தது. நெவில் பெர்ணாந்து ஆஸ்பத்திரிக்கு 39 தாதிகளை வழங்கியதில் நடந்த மோசடி, புற்றுநோய் மருந்து கொள்வனவில் இடம்பெற்ற 3,800 கோடி முறைகேடு தொடர்பிலும் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.