ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிவாயல் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

அதேசமயம் நெடுஞ்சாலைகள், தொழில்சாலைப் பகுதிகள், தொழிலாளர் முகாம்கள், வணிகத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகம் ஊரடங்குக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி வருகிற நிலையில், தற்போது மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கும் முடிவை எடுத்துள்ளது. அதேபோல், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்புடன் பணிக்குத் திரும்பக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தினசரி தொற்று எண்ணிக்கை 900-ல் இருந்து 400 ஆகக் குறைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்த வந்து இரவு நேர ஊரடங்கை கடந்த புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றான துபாயில் வணிக வளாகங்கள், விடுதிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது. 

மேலும், ஊரடங்குக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச குழுவுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிகள் வழங்கி வருகிறது. இதுவரையில் 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது.

இதுவரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 48,246 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 37,000 பேர் குணமாகியுள்ளனர். 314 பேர் பலியாகியுள்ளனர்.

By Admin

Leave a Reply