ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும்.
இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி × அல்லது 1 எனும் இலக்கத்தை இட முடியும்.
இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பின் முதலாவது விரும்பும் வேட்பாளருக்கு 1 என்ற இலக்கத்தையும் இரண்டாவது விரும்பும் வேட்பாளருக்கு 2 என்ற இலக்கத்தையும் கட்டாயம் இட வேண்டும்.
மூன்று பேருக்கு வாக்களிக்க விரும்பினால் தான் முதலாவது வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரே 1 என்ற இலக்கத்தையும் இரண்டாவதாக வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் சின்னத்துக்கு எதிரே 2 என்ற இலக்கத்தையும் மூன்றாவது வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் சின்னத்துக்கு எதிரே 3 என்ற இலக்கத்தையும் கட்டாயம் இட வேண்டும்.
2 அல்லது 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் போது கட்டாயம் இலக்கம் இட வேண்டும். இங்கு புள்ளடி × இட முடியாது. புள்ளடியட்டால் அது நிராகரிக்கப்படும்.
உதாரணமாக
A,B,C,D,E ஆகிய ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் நீங்கள் உங்களது முதலாவது வாக்கினை A இற்கும் இரண்டாவது வாக்கினை E இற்கும் மூன்றாவது வாக்கினை C இற்கும் வழங்க விரும்பினால் பின்வருமாறு இலக்கமிட வேண்டும்.
வேட்பாளர் A – 1
வேட்பாளர் B
வேட்பாளர் C – 3
வேட்பாளர் D
வேட்பாளர் E. – 2
ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் முறை
வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் முதல் கட்டமாக வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட முதலாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். இதன்போது வேட்பாளர் ஒருவர் உரிய பெரும்பான்மை வாக்குகளை (50% Plus) (அதாவது அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அரைவாசியை விடவும் 1 வாக்கு மேலதிகமாக) பெற்றுக்கொண்டிருப்பின் அவர் வெற்றி பெற்ற வேட்பாளர் என எவ்வித சந்தேகமும் இன்றி தெரிவு செய்யப்படுவார்.
உதாரணமாக
அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
ஒரு கோடி 20 லட்சம் (12,000,000) என வைத்துக் கொள்வோம்.
இங்கு வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு
வேட்பாளர் A – 6,200,000
வேட்பாளர் B – 4,100,000
வேட்பாளர் C – 1,000,000
வேட்பாளர் D – 40,000
வேட்பாளர் E – 30,000
இங்கு அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 50% வீதம் 6,000,000 (அறுபது இலட்சம்) ஆகும். எனவே ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு அவர் பெற்றிருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 6,000,001 ( அறுபது இலட்சத்தி ஒன்று) ஆகும்.
இங்கு முதல் சுற்றிலேயே வேட்பாளர் A தேவையான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
முதல் சுற்றின் போது யாருக்கும் உறுதியான பெரும்பான்மை கிடைக்காதபோது அதிகமான வாக்குகளைப் பெற்ற முதல் இரு அபேட்சகர்கள் தவிர்ந்த ஏனையோர் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்.
பின்னர் இவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் இருவருக்கிடையே உறுதியான பெரும்பான்மை ஒருவருக்கு கிடைக்கும் வரையில் பகிரப்படும். இதனடிப்படையில் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.
உதாரணமாக
அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
ஒரு கோடி 20 லட்சம் (12,000,000) என வைத்துக் கொள்வோம்.
இங்கு வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு
வேட்பாளர் A – 4,200,000
வேட்பாளர் B – 2,000,000
வேட்பாளர் C – 40,000,000
வேட்பாளர் D – 40,000
வேட்பாளர் E – 1000,000
இங்கு தேவையான பெரும்பான்மையை எந்த ஒரு வேட்பாளரும் பெற்றுக் கொள்ளாததால் அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொண்ட A மற்றும் C ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
பின்னர் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் (B,D,E) வாக்குகள் மீண்டும் எடுக்கப்பட்டு அவர்களது வாக்குச்சீட்டில் A மற்றும் C இற்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும்.
இதன் போது அதிகமான மொத்த வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
அவ்வாறில்லாமல் இதன்போது இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றிருப்பின் திருவுளச் சீட்டின் மூலம் வெற்றியாளர் தீர்மாணிக்கப்படுவார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் (2024) மும்முனைப் போட்டி காணப்படுவதாழும், பிரபலமான பலர் போட்டியிடுவதனாலும் பெரும்பாலும் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் உறுதியான பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்புகள் முலமே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.
எனவே நாம் வாக்களிக்கும் போது, இது தொடர்பான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
by :
M.S.M. Naseem (SLTS) – MA in political science, M.Ed (R)