சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் 100 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடற்படை எஸ்.எம்.எஸ் கஜபாவை இலங்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

“அரேபிய கடல் கடற்கொள்ளைக்கு பெயர் பெற்றது” என்று சுட்டிக்காட்டிய அவர், வணிகர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு சுதந்திரமாக பயணிக்க உதவும் முகமாக இலங்கை கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைக்காக இரண்டாவது கப்பலை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அனுப்பப்படவுள்ள திகதி போன்ற கூடுதல் விபரங்களை வெளியிட முடியவில்லை என்றும் கேப்டன் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை செங்கடல் பாதுகாப்பிலும் இலங்கையின் கப்பல்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார்.

Leave a Reply