திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமானது.

உலக பொருளாதாரத்திற்கும் தொழிற் சூழலுக்கும் ஏற்ற திறமையான மனித வளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திறன் விருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

மொத்த வேலையற்ற மக்களில் 70% திறமையற்ற தொழிலாளர் பிரிவில் உள்ளனர். பயிற்சிகளின் ஊடாக அவர்களை தொழில் தேவைக்கு பொருந்தக்கூடிய திறன்களைக் கொண்ட பிரிவினராக மாற்ற வேண்டும். “Skills”  ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் பாடசாலை கல்வியை விட்டுச் செல்லும் இளைஞர்களுக்கும் வேலையற்ற அல்லது திறமையற்ற தொழிலாளர்களுக்கும் நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் வலையமைப்பொன்றை வழங்குகிறது. திறன் விருத்தி பயிற்சிகள் 08 துறைகளில் நீண்ட மற்றும் குறுகிய கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

பரீட்சையில் தோல்வியுற்றாலும் வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு …

                                                             பிரதமர் தெரிவிப்பு

“Skills” ஸ்ரீலங்கா உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ .4,000 / – உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

நடமாடும் தொழிற்பயிற்சி பிரிவுகளாக வடிவமைக்கப்பட்ட ஐந்து பேருந்துகள் இந்த திட்டத்துடன் இணைந்ததாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்படும்.

ஜனாதிபதி அவர்கள் தேசிய பயிலுனர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை  தலைவரிடம் இந்த பேருந்துகளை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல Skills”  ஸ்ரீலங்கா செய்தித்தாளின் முதற் பிரதியை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி வைத்தார். தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஆடைகளை பிரதமர் அவர்கள் வழங்கி வைத்தார்.

எந்தவொரு பரீட்சையில் தோல்வியுற்றாலும், எதிர்கால சந்ததியினரை வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று இங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். நாட்டின் இளைஞர்களை உலகின் தொழில்சார் திறன்களையும் வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு ஏற்ற தொழில் அறிவையும் கொண்டவர்களாக மாற்றும் பொறுப்புடன் செயற்பட்டுவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திற்கு தனியார் துறையின் பங்களிப்பை குறிக்கும் முகமாக Pizza Hut மற்றும் Orange  நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதங்களை இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவிடம் கையளித்தன.

இந்நிகழ்ச்சியில் மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 2021.03.02

By Admin

Leave a Reply