இந்தியாவின் என்டீபீசீ (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம், நீண்டகால மின் உற்பத்தி
விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாகும்.
சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும்.
N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது.
