நமது நாட்டின் இன்றைய பொது வாழ்க்கையில், ஊழல், வன்முறை மற்றும் சகிப்புத்தன்மையின்மை போன்றவைகள் அதிகரித்துக் கொண்டுவரும் நிலையில், பண்புகளைக் கற்பிப்பதற்குக் கல்வியாளர்கள் தீவிரமான முயற்சி எடுப்பதற்கு இது சரியான நேரமில்லையா? இதற்குப் பெரும்பாலோர், “பண்புகளைக் கற்றுக் கொடுக்க முடியாது; அது தானகவே வரவேண்டும்” என முதல் எதிர்ப்புக் குரல் கொடுப்பார்கள். என்னுடைய கருத்து என்னவெனில், பெரும்பாலும் அது தானாக வரக்கூடியதாக இருந்தாலும், அதைக் கற்பிப்பதும் அவசியம் என்பதுதான்
பண்புகளை எப்படி மூன்று வித்தியாசமான கண்ணோட்டங்களிலிருந்து – தர்க்கரீதியாக, தத்துவரீதியாக, அறிவாற்றல் ரீதியாக – கற்றுக் கொடுக்கலாம் என்பதை இங்கு விளக்க முயற்சிக்கிறேன்
- தர்க்கவியல் கண்ணோட்டம்: கற்றுக்கொடுத்தல் என்பது வழிமுறையைச் சொல்வது அல்லது ஞானத்தை அல்லது திறமையைப் புகட்டுவதுதான் என்றால், அதைக் கலந்துரையாடல், பரிசோதனைகள், சொற்பொழிவுகள், விளக்கமுறைகள்/மாதிரிகள், கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது போன்றவைகள் மூலம் ஏன் பண்புக்கல்வி/ வாழ்க்கைத் திறமைகளைச் சொல்லிக் கொடுக்க முடியாது? ஞானத்தின் உள்ளடக்கம் நேர்மை, மரியாதை, இரக்கம் போன்ற அனைத்திற்கும் பொதுவான கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் போது, அதைக் கற்பிக்கும் வகைமுறைகளும் மற்ற பாடங்களைக் கற்பிப்பது போன்றே இருக்க வேண்டும்.
- தத்துவக் கண்ணோட்டம் –
கற்பிப்பது பற்றி பெரிய விஞ்ஞானிகளும், தத்துவஞானிகளும் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம்
ஸ்ரீ அரவிந்தர்: “ கற்பித்தலின் முதல் கொள்கை என்னவெனில் எதையும் கற்பிக்க முடியாது”
சுவாமி விவேகானந்தர்: “ஒருவருக்கு மற்றவர் உண்மையிலேயே கற்றுக் கொடுக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களாகவே கற்றுக் கொள்ள வேண்டும். வெளியிலுள்ள ஆசிரியர் ஆலோசனையை மட்டும் தான் தருவார். அது உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஆசிரியரை வேலை செய்யத் தூண்டி விஷயங்களைப் புரிந்து கொள்ளச் செய்யும்”
சாக்ரடீஸ்: ” நான் யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. நான் அவர்களை சிந்திக்க வைக்கத்தான் முடியும்”
கலிலியோ: “நீங்கள் மக்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது. அதை அவர்கள் அவர்களாகவே கண்டுபிடித்துக் கொள்ள மட்டும் தான் உங்களால் உதவி செய்ய முடியும்”
ஐன்ஸ்டீன்: ”நான் என் மாணவர்களுக்கு ஒருபோதும் கற்றுக் கொடுத்தது இல்லை. நான் நிலைமைகளை மட்டும் தான் அவர்களுக்கு அளிக்க முயல்கிறேன். அவர்கள் அதிலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”
ஆக, இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் போன்ற பெரியவர்கள், “எதையும் கற்றுக் கொடுக்க முடியாது; கற்றுக் கொள்ளத்தான் முடியும்” என்கிறார்கள். என்றாலும், கற்றுக் கொள்வதற்கான செயல்முறைகளை ஆசிரியர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். கணக்கு, அறிவியல், ஆங்கிலம், இசை அல்லது பண்புகள் எதுவாக இருந்தாலும் வகைமுறைகள் ஒன்றுதான். ஆசிரியகளுடைய பொறுப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் நல்ல முன்மாதிரியான ஆசிரியர்களின் தேவை மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
- அறிவார்ந்த கண்ணோட்டம்: எதையும் கற்றுக் கொள்ளதாவரை அதைக் கற்பிக்க முடியாது என சொல்லப்பட்டது. ஆகையால் அறிவியல் விஞ்ஞானிகள், கற்பித்தல் என்பது எப்படி நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினார்கள். நடைமுறையில் பாரம்பரியமான சொற்பொழிவு முறை கற்பித்தலுக்கு பயனற்றது எனபதுடன், செய்துகாட்டுதல், கலந்துரையாடல் மற்றும் “செய்தல்” போன்றவைகள் தான் சிறப்பாக கற்றுக் கொள்வதற்கு சக்தி வாய்ந்த சாதனமாகும் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ”கற்றல் பிரமிடு” (Learning Pyramid) தெளிவாகக் காண்பிக்கிறது.
பண்புகளைக் கற்பிப்பதற்கு நான் கலந்துரையாடலைக் காட்டிலும் செய்து காட்டுதலைத்தான் (ஒரு கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது) தேர்வு செய்வேன். இருப்பினும், அடுத்தவர்களுக்குக் கற்பிப்பதுதான் சிறந்த கற்றலாகக் கருதவேண்டும் என்பதையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். இது பண்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பாலனோர் பயன் பெற வழிவகுக்கும். ஆகையால் முறைப்படி விருப்பம் மற்றும் திறமை உள்ள ஆசிரியர்களை குறிப்பாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகு, அவர்கள் மூலம் பண்புகளை சிறந்த வழிமுறையில் கற்பித்தால், அது நிரந்தரமான நன்மைகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பயன் பெறுவார்கள். இதனால் கூடுதலான தொடர் விளைவு (domino effect) ஏற்படக்கூடும்.
உண்மையில் பிரச்னை என்பது பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி இருக்கக் கூடாது. நவீன கற்பித்தல் வகைமுறைகள் மூலம் பண்புகளைப் பற்றிக் கற்றுக் கொடுக்க நல்ல முன்மாதிரியாக உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில்தான் கவனமெல்லாம் இருக்கவேண்டும்.(thanks net)
.
.