வாஷிங்டன் :
 இராக் மற்றும் சிரியாவில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 85 இடங்களில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.  

இராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான் பகுதியில், கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு, ‘டவா் 22’ என்றழைக்கப்படும்  அமெரிக்காவின் ராணுவ தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்தனா்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். அமெரிக்க வான்பாதுகாப்பு அரணையும் மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜோா்டானிலுள்ள தங்கள் ராணுவ தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக அமெரிக்க படைகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, 
இராக்கிலுள்ள பயங்கரவாத குழுக்கள் அதிலும் குறிப்பாக, இந்தத் தாக்குதலுக்கு இராக்கில் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய போா்ப்படை’ என்ற அமைப்பு, திட்டமிட்டு ஜோர்டானிலுள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.அந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து ட்ரோன்களும் ஈரானில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜோா்டானில் ‘டவா் 22’ ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள இராக்கின் அல் குவைம் நகரில் முகாமிட்டிருந்த தளவாட மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தொடர் தாக்குதல்களில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

சிரியாவிலும், இராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்திருந்த நிலையில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இராக், தங்கள் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் இது என தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே, மேற்கு ஆசியாவிலுள்ள பல்வேறு அமெரிக்க ராணுவ நிலைகளில் அதிலும் குறிப்பாக இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்களை குறிவைத்து  கடந்த அக்டோபர் முதல் இதுவரை சுமார் 160 முறை ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் ஹமாஸுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ராணுவ நிலைகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த வேண்டுமென அமெரிக்காவில் குரல் வலுத்து வருகிறது. எனினும், ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை எனவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

By JF

Leave a Reply