கென்யா நாட்டில் பலூன்கள் மூலம் இணைய சேவை வழங்கும் வகையிலான தொழில்நுட்பத்தை தொடங்கியுள்ளதாக கூகுளின் ப்ராஜக்ட் லூன் டெலிகாம் கென்யாவுடன் இணைந்து அறிவித்துள்ளது.
பொதுவாக நகரப்பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைத்து இணைய சேவை வழங்குவது என்பது எளிதான ஒன்று அதேநேரத்தில் மலைக்கிராமங்கள், பள்ளத்தாக்கு பகுதிளை குறித்து பார்க்கையில் செல்போன் கோபுரங்கள் அமைப்பது என்பது சற்று கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பது என்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் கூகுள் இணையதள சேவையை தடையின்றி அளிப்பதற்கு ப்ராஜக்ட் லூன் என்ற தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது.
பலூன் மூலம் எப்படி இணைய சேவை
பலூன் மூலம் எப்படி இணைய சேவை வழங்கப்படும் என்ற கேள்விகள் மனதில் எழலாம். இந்த தொழில்நுட்பமானது ஹூலியம் அல்லது ஹைட்ரோஜன் போன்ற அடர்த்தி குறைந்த காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு பறக்கவிடப்படும்.
ஸ்ட்ராடோஸ்பியர் பகுதியில் நிறுத்தப்படும்
20 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள ஸ்ட்ராடோஸ்பியர் பகுதிகளில் பலூன் நிறுத்தப்படுவதற்கான காரணம், அங்கு காற்றின் வேகம் குறைவாக இருக்கும் அதனால் அந்த பகுதியில் செலுத்தப்படும் பலூன்கள் நிலையாக அதே இடத்தில் மிதக்கும். இந்த பலூன்கள் பாலி எதிலீன் தாள்களில் தயாரிக்கப்படுகின்றன.
பல்வேறு மின்னணு சாதனங்கள்
இந்த பலூனுக்குள் பல்வேறு மின்னணு சாதனங்கள் நிறைந்த ஒரு பெட்டி வடிவிலான பொருள் இருக்கும். இதில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை சேமித்து செயல்படும். ஒரே பகுதியில் தேவைக்கேற்ப பலூன்கள் பறக்கவிட்டு அது ஒவ்வொன்றோடு தொடர்பு கொள்ளவும் பூமியை தொடர்பு கொள்ளவும் ரேடியோ ஆண்டனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பலூன்கள் வைபை சேவையை எல்லாப் பகுதிகளுக்கும் வழங்குகிறது.
Google project loon என்ற செயல்முறை
இந்த நிலையில் கென்யாவில் கிராம பகுதிகளுக்கு பலூன் மூலம் இணைய சேவை வழங்க கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் ஒரு பிரிவான லூன் Google project loon என்ற செயல்முறையை டெலிகாம் கென்யாவுடன் இணைந்து அறிவித்துள்ளன. ஆப்பிரக்காவில் உள்ள 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 28 சதவீதம் பேருக்கு மட்டுமே இணைய அணுகல் இருக்கிறது. இந்த திட்டம் அந்த வெற்றிடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிகாம் கென்யா தலைமை நிர்வாக அதிகாரி
இந்த தொழில்நுட்ப அறிமுகம் குறித்து டெலிகாம் கென்யா தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் கென்யர்கள் பலர் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 4ஜி எல்டிஇ சேவை
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மலைக்கிராமங்கள், பள்ளத்தாக்கு உட்பட கென்யாவின் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 4ஜி எல்டிஇ சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பலூன்கள் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டு காற்றின் ஓட்டத்தின் மூலம் கென்யாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
(By : Tamil gizbot)