உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் அணியும் குரோயேசியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணியினரும் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட்- அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டு குரோயேசியா அணி வெற்றி பெற்றது. கடந்த உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளையும் குரோஷியா பெனால்டி சூட் அவுட்டிலேயே வென்றிருந்தது. மேலும், அரையிறுதி போட்டியை கூட எக்ஸ்ட்ரா டைமில்தான் வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியையும் பெனால்டி சூட் அவுட்டிலேயே குரோஷியா வென்றிருந்தது.
சர்வதேச போட்டிகளில் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்துள்ளார். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணிக்காக தனது 77வது கோலை அடித்தார், நெய்மர். ஆட்டத்திற்கு பின்னர், நெய்மர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் இன்னும் குழப்பத்திலேயே உள்ளேன், தெளிவாக சிந்திக்க முடியவில்லை. ஒருவேளை, நான் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடலாம், விளையாடாமலும் போகலாம். பயிற்சியாளர்கள் மாறுவார்கள், அந்த பயிற்சியாளர் என்னை விரும்புவாரா என்று தெரியவில்லை.” என கூறியுள்ளார்.
அர்ஜென்டினா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையேயான காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 மஞ்சள் அட்டை (Yellow card) வழங்கப்பட்டது. இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் அதிக மஞ்சள் அட்டை வழங்கப்பட்ட ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு 8 மஞ்சள் அட்டை மற்றும் 1 சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. அர்ஜென்டினா அணிக்கு 10 மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
உலகக் கோப்பை 2022 கால் இறுதிப் போட்டியில் பிரேசில் அணி, குரோசியா அணியிடம் பெனால்டி சூட் -அவுட் வாய்ப்பில் 1-1 (4-2 பெனால்டி கோல்கள்) என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரேசில் அணி தலைமை பயிற்சியாளர் டைட் தனது பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மற்றொரு காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி, அர்ஜென்டினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது. இதையடுத்து, நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.