உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு ,
யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில் ,
யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார்.
சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும்,
உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்து, அவற்றை விற்பனை செய்து விட்டு ,
மீண்டும் இரவு 08 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லப்பட்ட நிலையில் ,
13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.