அஸ்வெசும நலன்புரி நன்மையை பெறுகின்ற போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை நிதியமைச்சின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கை அடுத்த வாரத்துக்குள் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வறுமையில் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் இலவச அரிசி வழங்கப்படுவதாகவும், அஸ்வெசும பயனாளிகளுக்கு குறித்த அரிசி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த அரிசியைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், சிலர் அதனை பெற்றுக்கொள்வதற்கு செல்லாமல் இருக்கின்றனர்.
இதனால் சில தரப்பினர் குறித்த அரிசியை மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இந்த அறிக்கை கோரப்படுவதன் ஊடாக அரிசியை பெறாதவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் ஜூன் மாதமளவில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது கட்ட நலன்புரி நன்மைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.