அமெரிக்காவில் குறைந்துவரும் குழந்தை பிறப்பை அதிகரிக்க செய்ய, பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கவிக்க, ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.
பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இது அந்நாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, அந்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்வதை ஆதரிக்க அந்நாட்டு அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அமெரிக்காவிலும் 1990களுக்கு பிறகு, குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்து காணப்படுகிறது. 2023 ம் ஆண்டு குழந்தைப் பேறு விகிதம் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.62 ஆக உள்ளது. இந்தப் பிரச்னை பெரிய பிரச்னையாக மாறும் என துணை அதிபர் ஜேடி வான்ஸ் எச்சரித்து உள்ளார். குழந்தை பெற்றுக்கொள்வதை அதிகரிக்க செய்ய வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்நிலையை மாற்றி, பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஆதரிக்க புதிய திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் அதிகாரிகள், குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்கா அளித்து வரும் ‘ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில், திருமணமாகி குழந்தை உள்ளவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது