திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள விகாரையின்  விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும் அப்பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில்  (25) முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான அரசியல்வாதியொருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

குறித்த காணிகள் துப்புரவு செய்யப்படுவதை வயலுக்கு சென்ற விவசாயிகளினால் அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இன்றையதினம் (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் இந்நிலையில் ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்கள அதிகாரிகள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பச்சை மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply