பொருளாதார சிக்கலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக தேசிய கடன் பிணை நிறுவனத்தினை நிறுவுதல் உட்பட சகல நடவடிக்கைளுக்காகவும் 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்நிதி ஊடாக ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் சிறிய மற்றும் மத்திய தரக் கைத்தொழில்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு மற்றும் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக இவ்வுதவியைப் பயன்படுத்தலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட முயற்சியாளர்களுக்கு இக்கடன் நிதியிலிருந்து மூலதன உதவிகளை வழங்க முடியும். அத்துடன் நாட்டின் 52%ஆக தல தேசிய உற்பத்தியைப் பேணுவதுடன், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் முயற்சிகளின் ஊடாக 42% ஆன தொழில் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.