திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அந்த வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக, மரதன் ஓட்டப்போட்டி, திங்கட்கிழமை (11) காலை நடத்தப்பட்டது.
அதில், பங்கேற்ற மாணவர்களில் ஒருவன், திடீரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார மாற்றப்பட்டார்.
எனினும், அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் மரணத்திற்கு,
வைத்தியர்களின் அலட்சியமே காரணமென தெரிவித்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
மாணவனுக்கு மூன்று மணிநேரம் எந்தவொரு சிகிச்சையும் முன்னெடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.
திருக்கோவிலை சேர்ந்த 16 வயதான ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.