ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் ஊடகவியலாளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருவதாகவும், இதற்கு அவசியமான இடம் வழங்குதல், வளவாளர்களுக்கான செலவு போன்ற சகல செயற்பாடுகளும் இந்நிதியத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் தொடருக்கு தமிழ் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் வி. எஸ். ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உரையில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டின் நிகழ்ச்சித் தொடருக்கு வழங்கப்பட்ட நிதி தற்போது முடிவடைந்துள்ளதாகவும், இவ்வாண்டிற்கான நிகழ்ச்சித் தொடரை நடாத்துவதற்கு அந்நிதியிலிருந்து நிதிப் பங்களிப்பைக் கோரி உள்ளதுடன் அது கிடைத்ததும் உடனடியாக நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.