இந்திய பெருங்கடலுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்து புதைத்தாக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
தன்னை ஒரு மத போதகர் என்று கூறிக்கொள்ளும் நிதெங்கே மெக்கன்சி, இயேசு கிறிஸ்துவதை சந்திக்க வைப்பதாக கூறி 400-க்கும் மேற்பட்டோரை பட்டினியால் சாகடித்ததாகவும், பயங்கரவாதம், குழந்தைகளை சித்ரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி அன்று மெக்கன்சி மற்றும் அவரது மற்ற 38 கூட்டாளிகள், 3 பச்சிளம் குழந்தைகள் உட்பட 191 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் தங்களை நிரபராதி என்று தெரிவித்துள்ளனர்.
இதில் 31 வது குற்றவாளி சற்று மனநலம் சரியில்லாமல் இருந்ததால் அவரை ஒரு மாதத்திற்கு பிறகு மலிந்தி உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்டார்வேஷன் கல்ட் தலைவர் மெக்கன்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷ்காஹோலா காட்டுப்பகுதியில் தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் 429 பேர் பசியால் உயிரிழந்தது தெரியவந்தது.
ஆனால் குழந்தைகளின் சடலங்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்கள் அடித்து, கொடுமைப்படுத்தப்பட்டு, போராடி உயிரிழந்தது தெரியவந்தது.
மெக்கன்சி உருவாக்கிய குட் நியூஸ் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ் ஒரு குற்றாவளிகள் குழு என்றும் அவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் டொனோனோகா குழந்தைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின்படி, மெக்கன்சி மற்றும் அவரது 38 கூட்டாளிகள் வேண்டும் என்றே குழந்தைகளுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு முள் குச்சிகளால் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.