இலங்கை நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொண்டாடப்படுகிறது.திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் குறித்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.”புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெறும் இச் சுதந்திர தின வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இதன் போது யுத்தத்தின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றதுடன் மர நடுகையும் இடம் பெற்றது.

இதனை தொடர்ந்து தம்பலகாமம் தாயிப் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் கழகங்கள் சிவில் அமைப்புக்கள் இணைந்து சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதேச செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். சமாதானத்தை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை நிற புறாக்களும் பறக்கவிடப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் நாட்டின் எதிர் காலம் இளைஞர்களின் கையில் உள்ளது இதனை தீர்மானித்து நல்லதொரு பாதைக்கு முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கவும் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply