கொரோனா பரவல் காரணமாக, ஏற்பட்ட மின்சாரப் பட்டியல் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, அதற்குப் பொறுப்பான அமைச்சர்  என்ற வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் இணைந்து சலுகைப் பொதியொன்றை அமைச்சரவையில் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.

இதில், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களிலும், 0 – 90 வரையான அலகுகளைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25% கட்டண கழிவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த மின்சாரப் பட்டியலை செலுத்துவற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கும் அதில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தாமதமாக கட்டணம் செலுத்துவது தொடர்பில் எவ்வித அபராதமும் அறவிடுவதில்லை எனவும், எந்தவொரு காரணத்திற்காகவும் மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை எனவும் அந்த சலுகைப் பொதியிலுள்ள யோசனையில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்பட்ட போதிலும் இது தொடர்பில் மிகவும் கடினத்துடன் குறித்த யோசனையை அமைச்சர் முன்வைத்ததாக, பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆயினும், நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவையில் இவ்விடயம் தொடர்பில் மிக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில் பயன்படுத்தப்பட்ட மின் அலகுகளைப் பார்க்கிலும் எத்தனை அலகுகள் மேலதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கணக்கிடுதல் அல்லது 90 அலகுகள் எனும் எல்லையை 120 அலகுகளாக அதிகரிக்க முடியாதா என பல்வேறு யோசனைகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, இதில் மேலும் பல சலுகைகளை இணைக்க அமைச்சரவை முடிவு செய்ததாகவும், அவை தொடர்பில் அடுத்து அமைச்சரவையில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்க, அமைச்சரவை தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக, கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டு மக்கள் தமது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியேற்பட்டதால் குறித்த காலப் பகுதியில் மின்சாரப் பாவனை அதிகமாகக் காணப்பட்டதோடு, பல துறைகளில் தொழிலில் ஈடுபட்டவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டதை  கருத்தில் கொண்டு குறித்த  நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மின் கட்டணப் பட்டியலுக்கு வழங்க வேண்டிய மானியம் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடங்கிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பதற்காக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, குழுவொன்றை நியமித்திருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த குறித்த குழு, தனது அறிக்கையை நேற்று (08) கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை திறைசேரி அதிகாரிகளுடன் மேலும் ஆராய்ந்து மக்களுக்கு வழங்கக்கூடிய மானியம் தொடர்பான சிபாரிசுகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வேண்டிக்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply