கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக இந்திய பிரஜைகள் 151 பேர் நேற்று முன்தினம் இரவு (22) வந்திருந்ததோடு, அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 பேர் நேற்று (23) வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, நாளொன்றுக்கு 500 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படக்கூடிய ஆய்வுகூடமொன்று கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த பெறுமதி 25 கோடி ரூபாயாகும்.

பரிசோதனை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், தன்னியக்க மாதிரியை (Muto Mated Sample Extractor)  உருவாக்கும் தொகுதியுடன் கூடிய நவீன உபகரணங்களைக் கொண்டதாக குறித்த ஆய்வுகூடம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply