கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் இந்நிலைமையில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
தற்போது சமூக இடைவெளி பேணி 50 பேரின் பங்களிப்புடன் மத ஸ்தலங்களில் கூட்டாக மத கடமைகளை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர், இன்றைய தினம் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் முதலாவது ஜும்ஆ தொழுகையை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள மார்க்க வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜும்ஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையை கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜும்ஆவை நிறைவேற்றுதல் அவசியமாகும்.
- கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கையை சுகாதார அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளதால் அதனை விட அதிக எண்ணிக்கையுடையோர் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- இடநெருக்கடியின் காரணமாக ஓர் ஊரில் பல இடங்களிலும் ஜும்ஆத் தொழமுடியும் என்ற மார்க்க சலுகையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை பேணி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் ஆலோசனையுடன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜும்ஆ மஸ்ஜித்கள் ஏனைய மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற இடங்களில் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ளல். சுகாதார அதிகாரிகள் (PHI) அனுமதியளிப்பின் மத்ரஸாக்கள், மண்டபங்கள், பொது இடங்கள் போன்றவற்றிலும் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
- நோய், பிரயாணம், பயம், மழை தொழுகைக்கு செல்லமுடியாத நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்றாமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
- கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையினரை விட அதிகமானோர் ஒன்று சேர்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணி ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஜும்ஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுது கொள்வது போதுமானது. நிர்ப்பந்த நிலையில் ஜும்ஆவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜும்ஆவை விட்ட குற்றம் ஏற்படாது. மாறாக அதற்குரிய நன்மை கிடைக்கும்.
- இவ்விடயத்தில் ஊர் ஜமாஅத்தினர் தமது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, முடியுமானவர்கள் ஜும்ஆவை நிறைவேற்றுவதுடன், ஏனையவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுதுகொள்ளல் வேண்டும்.
- எமது நாட்டில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாகவுள்ள வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டல்களையும் கவனத்திற் கொள்ளவும்.
மேற்கூறப்பட்ட முறைகளில் ஓர் ஊரில் மேலதிக உதவி இது தொடர்பில் தேவைப்பட்டால் எமது துரித சேவை இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளவும்.