துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரைக்கு காரில் வந்த பெண், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் காருடன் கடலுக்குள் பாய்ந்தார்.

துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். கொரோனா காரணமாக துபாயில் மூடப்பட்ட கடற்கரைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் துபாயில் வசித்து வரும் அமீரகத்தை சேர்ந்த 41 வயது பெண் தனது காரில் அல் மம்சார் கடற்கரைக்கு சென்றார். அங்கு கடற்கரையின் முகப்பில் உள்ள கார் நிறுத்தத்தில் தனது காரை நிறுத்துவதற்காக சென்றார்.

அப்போது, அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுத்து பேசிய போது, மறுமுனையில் பேசியவர் சோகமான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கவனம் சிதறியது. உடனே அவர், காரின் பிரேக்கை பிடிப்பதற்கு பதிலாக, பதற்றத்தில், ஆக்சிலேட்டரை மிதித்து விட்டார்.

இதனால் அந்த கார் சீறிப்பாய்ந்து கண்இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் பாய்ந்தது. அத்துடன் 90 அடி ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரில் அந்த பெண்ணுடன் கார் மூழ்க தொடங்கியது. அதற்குள் அவர் காரில் இருந்து வெளியேறி தண்ணீரில் தத்தளித்து உதவிகேட்டார்.

இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் சென்று, அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண் காயமின்றி உயிர்தப்பினார். பின்னர் தண்ணீரில் மூழ்கிய காரும் கிரேன் மூலம் இழுத்து கரைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் கடற்கரை அருகே காரில் செல்வோர் கவனமாக செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By : Malaimalar news

By Admin

Leave a Reply