நாம் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத வகையில் 8-சக்கரங்களுடன் உலகளவில் பிரபலமான ஃபியாட் யுனோ கார் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களை ரஷ்யாவை சேர்ந்த கேரேஜ்54 என்ற அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் பணிகளுக்கு பிரபலமான கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மெக்கானிக் குழுவினர் பின்புற பகுதியில் கூடுதலான சக்கரங்களை வைப்பதற்கு எவ்வாறு கச்சிதமாக காரின் பேனல்களை வெட்டி எடுத்துள்ளனர் என்பது ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது.
இதனால் கார் வித்தியாசமான ஸ்டைலிற்கு மாறியிருந்தாலும், கூடுதலான சக்கரங்களை தவிர்த்து காரில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்த ஃபியாட் யுனோ மாடலின் பின்பகுதியில் உள்ள மூன்று சக்கர அச்சுகளில் ஒரு அச்சு இரண்டு சக்கரங்களுக்கு மேலே சக்கரங்களின் தொடுதலுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தரையை தொட்டுள்ள இரு சக்கரங்களின் இயக்கத்திற்கு எதிர்திசையில் மேல் உள்ள சக்கரம் சுழலும். மற்றப்படி கூடுதலான ட்ராக்ஷனினால் ஃபியாட் யுனோ மாடலின் முன்-சக்கர-ட்ரைவ் அமைப்பில் மாற்றமில்லை. கூடுதலான சக்கரங்களினால் இந்த காரின் என்ஜின் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
அதேபோல் கூடுதலாக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் சஸ்பென்ஷன் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற கரடுமுரடான சாலைகளை கொண்ட பகுதிகளில் இந்த காரை இயங்கினால் அசவுகரியமான பயணத்துடன் மிக பெரிய அளவிலான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
இதனால் தான் இந்தியாவில் இதுபோன்ற கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானதாகவும், ஆர்டிஒ அலுவலங்களில் பதிவு செய்ய முடியாத நிலையும் உள்ளது. அட்டகாசமான அலாய் சக்கரங்களுடன் கஸ்டமைஸ்ட் மாற்றமாக சிவப்பு நிற பெயிண்ட் அமைப்பும் இந்த யுனோ காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மட்டும் தான் இந்த கூடுதலான சக்கரங்கள் அழகாகவும் வித்தியாசமாக உள்ளன. மற்றப்படி என்ஜினின் ஆற்றல் முழுவதும் முன் சக்கரத்திற்கே செல்வதால் ஆஃப் ரோடுகளில் இந்த சக்கரங்களால் எந்த பயனும் இல்லை. ரஷ்யா போன்ற பனிசூழ் நாடுகளிலும் இந்த கஸ்டமைஸ்ட் கார் அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது.
ஏனெனில் மண்ணோடு கலந்த பனிகள் முன்று சக்கரங்களுக்கு இடையில் அடிக்கடி சிக்கலாம். இதனால் கார் பாதி வழியில் நின்று போகவும் வாய்ப்புண்டு. ஃபியாட் நிறுவனத்தின் யுனோ மாடல் தற்போதும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆனால் தேசிய டீசல் என்ஜின் என அழைக்கப்பட்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்ட போது கிடைத்த மவுசு தற்போது ஃபியாட் யுனோ மாடலுக்கு கிடைப்பதில்லை. இந்திய யுனோ மாடலில் இந்த டீசல் என்ஜின் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
News by : drivespark