திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவக்குமார் இன்று(14) உத்தரவிட்டார்.

திருகோணமலை,நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகேஸ் குணதிலக்க என்கின்ற சந்தேக நபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் தெரிவிப்பதாவது:

தனது உறவினருடன் நேற்றைய தினம்(13) திருகோணமலை பேரூந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக குறித்த சிறுமியை ஓரிடத்தில் நிக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் குறித்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கிய பின்னர் வந்து பார்த்தபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதட்டமடைந்த குறித்த சிறுமியின் உறவினர்கள் அங்கு கடமையில் நின்ற பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகைதந்த பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து. குறித்த சிறுமியுடன் கதைத்துக்கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறுமியை இழுத்துச்செல்லும் காட்சி அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியிருந்தது.

பின்பு சில மணி நேரங்களின் பின்னர் திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருசிறுமி அழுதுகொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply