பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.அவ்வாறு வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் நிலையத்திற்கெனப் பிறிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறான நிலை ஏற்படுமாயின் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதில் தாமதம் ஏற்படலாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றாலும் சமூகப் பரவல் இல்லையென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சில வேளைகளில் வைரஸ் பரவலானது எங்காவது திடீரெனத் தோன்றுமிடத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்று நடவடிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே உள்ளது என குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை தேர்தல் பரப்புரைகளுக்காகப் பதாகைகள், கட்டவுட், சுவரொட்டிகள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறு சிறு கூட்டங்கள் அதிகளவில் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்படலாம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தடைகளை மீறிப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டால், அவற்றை அகற்றும் அறிவுறுத்தல்களை மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கூட்டங்களில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை ஐம்பதுக்கு மட்டுப்படுத்தியிருப்பதால், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பெருமளவு நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.

இது இவ்விதமிருக்க, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர், போட்டியிடுவதிலிருந்து விலகினாலும், அவருடைய பெயர் வாக்குச் சீட்டில் உள்ளடக்கப்பட்டே இருக்கும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் விபரித்தார். தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெறுவதாக ஒரு சில வேட்பாளர்கள் பொதுமக்களுக்குப் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply