கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக்கியமாகச் செய்ய வேண்டியவைகள், வீட்டிற்குள் இருப்பதும், அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்று வந்தால்இரு கைகளை நன்றாக கழுவுவதாகும்.
ஆனால் இவ்விரண்டும் வீடற்றவர்களுக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்கள் சாலையோரங்களில் இருப்பதால் நுரையீரல் மிக எளிதில் பாதிக்கப்படுகிறது. மேலும் கூட்டம் கூட்டமாகச் சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதால் அவர்களுக்கு நோய் மிக எளிதாகத் தொற்றும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் வீடற்றவர்களை நோய்த்தொற்றுகள் பாதிப்பதற்கு மும்மடங்கு வாய்ப்புகள் உள்ளன.
நாம் நினைத்துக்கொண்டு இருக்கின்றோம் இந்த பிரச்சினை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரம் என்று ஆனால் வீடற்றவர்களின் பிரச்சினை உலகெங்கும் உள்ள பிரச்சினையாகும்.
ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்ற வீடற்றவர்களுக்கான அமைப்பு ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி எச்சரித்துள்ளது.
அந்த வகையில் பிரிட்டனில் இயங்கி வருகின்ற வீடற்றவர்களுக்கான அமைப்புக்களின் 36 தலைவர்கள் ஒன்று சேர்ந்து அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்கள்.
அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையாக லண்டன் மேயர் சாதிக் கான் ஹோட்டல்களில் 300 அறைகளை வீடற்றவர்களுக்காக ஒதுக்கியுள்ளார். கொரோனா பாதிப்பு நீங்கும் வரை அவர்கள் அங்கேயே தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டு மக்களின் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஒருவருடைய ஆரோக்கியத்துக்காக மற்றொருவருடையதை சமன் செய்துகொள்ள முடியாது. மாவட்ட நிர்வாகங்கள் வீடற்றவர்களின் நிலையையும் தீவிர கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.