ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி உள்ளிட்டவற்றின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், கொரோனா பிரச்னையால் இந்த வருடம் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 10 – ன் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு 11 – ன் பீட்டா வெர்ஷன் பொதுமக்கள் மற்றும் டெவலப்பர்கள் பயன்பாட்டுக்கு வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் இறுதி செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிடுவதற்கு முன்பு பீட்டா வெர்ஷனை இலவசமாக வழங்கும். இதைப் பொதுமக்களும் டெவலப்பர்களும் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி தங்களது பயன்பாட்டு அனுபவத்தைத் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் ஆண்ட்ராய்டு பதிப்பு மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு இறுதி செய்யப்படும். தற்போது, கூகுளின் ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பு டெவலப்பர்களும், பொதுமக்களும் நேரடியாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பை இணையத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தற்போது பிக்சல் 2, 3, 3a, 4 வகை போன்களில் மட்டும் ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 11 பாதிப்பானது ஆண்ட்ராய்டு 10 ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவே வெளியாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 – ல் ஸ்கிரீன் ரெக்கார்டிங், நோட்டிபிகேஷனில் தேவை அடிப்படையில் மாற்றம் செய்யும் வசதி, உரையாடல்களை எளிதில் மேற்கொள்ளும் வகையில் புது மாற்றம், கூகுள் பே வசதி ஆகியவை குறிப்பிடத்தக்க மேம்பாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.