பாலைவன வெட்டுக்கிளிகள். Coronavirus கு அடுத்து இன்று அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பெருங்கூட்ட்மாக படையெடுத்துவரும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் இந்திய விவசாயிகள் பெருமளவு கலக்கத்தில் உள்ளனர். இது இலங்கையை வந்தடையுமா என்பது இன்னும் புரியாத்தாகவே உள்ளது. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அதிர வைக்கின்றன. இதோ சில உண்மைத் தகவல்கள்:

* ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளி பூச்சிகள், ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.

* ‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதிக தூரத்துக்கு புலம்பெயர்ந்து வலசை செல்லும் ஆற்றல் கொண்டவை. ஒரு நாளில் 150 கி.மீ. தூரம் வரை பறக்கும்.

* ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலை இடைவிடாமல் பறந்து, கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன.

* வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்கின்றன.

* நம் வீட்டருகில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகளைப் போல் அல்லாமல் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீ.யில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் பெற்றவை. ஒரு சதுர கி.மீட்டரில் 4 – 8 கோடி வெட்டுக்கிளிகள் கூட்டம் திரளாக இருக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 6 மாதங்கள்.

* ஆப்பிரிக்கக் காடுகளில் வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்து மண் ஈரமாகும்போது, இந்த ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் பல்கி கோடிக்கணக்கில் உற்பத்தியாகின்றன.

* தொடக்கத்தில் வண்டுகள் போல வளரும் இவை, இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்கத் தொடங்கிவிடும்.

* வெட்டுக்கிளி வகைகளிலேயே மோசமானது, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பாலைவன வெட்டுக்கிளி அதன் எடைக்கேற்ப உணவைத் தின்று தீர்த்துவிடும்.

* ‘லோகஸ்ட்’ (Locusts) வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும்.

* இந்த வெட்டுக்கிளிகள் தோட்டப் பயிர்கள், பூக்கள், பழங்கள் மட்டுமல்லாமல், வீடுகளில் தொங்கும் ஆடைகளைக்கூட தின்று தள்ளிவிடும்.

* ஒரு வெட்டுக்கிளி கூட்டம் ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் (40 கோடி) பவுண்டுகள் வரை தாவரங்களை உண்ணும் ஆற்றல் பெற்றவை!

* வெட்டுக்கிளிகள் கூட்டம் வீடுகளுக்குள் புகுந்துவிட்டால், வீட்டில் உள்ள மரப் பொருட்களையும் விட்டுவைக்காது என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள்.

* இந்த வெட்டுகிளிகளின் தாடைகள் சக்தி வாய்ந்தவை. இவை சாப்பிடும்போது எழும் சத்தத்தைத் தூரத்திலிருந்தே கேட்க முடியும்.

* 1954-ல் வடமேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கும், 1988-ல் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகள் வரை இந்த வெட்டுக்கிளிகள் நீண்ட தூரம் சென்ற பதிவுகள் உள்ளன. அப்போது இந்த வெட்டுக்கிளிகள் 10 நாட்களில் 4,989 கி.மீ. பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

* கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் இந்தியாவுக்குள் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்துள்ளன.

By Admin

Leave a Reply