முடிவை எட்டும் எல்லைகளைப் பூட்டிவைத்துவிட்டாய்
தானாகவே திறக்கும் வரை காத்திருத்தல்
விதிக்கப்பட்டிருப்பதாகவே சொல்லித் தரப்பட்டிருக்கிறது
இலக்கற்ற பயணத்தின் செக்குமாட்டுத்தனம்
மரத்தும் மரத்தும் வாய்த்தபடியே இருக்கிறது
கொடுக்குகளுடனான விஷத் தேள்களுக்கும்
முதுகிலேறி ரத்தமுறிஞ்சும் காட்டேரிகளுக்கும்
குலுக்கும் கைக்குள் வைத்திருக்கும் கத்திகளுக்கும்
பஞ்சமேயின்றி வியாபித்திருக்கிறது இந்த வெளி.
மனத்தராசு எடை போட்டபடியே சுழல்கிறது
இரண்டு நரகில் எது கொஞ்சம் பாரமற்றிருக்கிறதென்று
மேலும் கீழுமாய் நகரும் தட்டுகள் சமமாய் நிற்கும்
ஒற்றைத் தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது உடலம்
முடிவின் புள்ளியை வலிந்து எட்டி
ஒரு வெற்றிக் கொடியை நாட்டிவைப்பதற்கு…
இல்லாத இயல்பை ஒட்டவைக்கும் முனைப்பில்
ஓவியமும் கவிதையும்
இன்னொரு தளத்தை எட்டிக் கடந்தன
நானாகவே இருக்கும் என்னையும்
எனக்கென்று எஞ்சியிருக்கும் சுயத்தையும்
இன்னொன்றாக வரித்துக்கொள்ளும் சமரசங்களில்
எனக்கு நம்பிக்கை இல்லை!
பனி பொழிந்தபடி இருக்கிறது
பயணத்தின் நெடுந்தொலைவு
வரிசைகட்டி அழைக்கிறது பாதங்களை
மொத்த ஆற்றையும் அள்ளித் தீர்த்திட முடியுமா?
வாய்க்கும் மணிகளை மட்டுமே
கொத்திப் பசிதீர்க்கிறது குருவி
எல்லா மழைக்குள்ளும் கரைந்துழல விழையும் மனதை
இறுகக் கட்டிப் பிணைத்திருக்கிறது
வயது
ச்சே!
அப்படி என்னதான் வாழ்ந்து கழித்துவிட்டோம்?
மீண்டும்… 📝📝
ஐ. தஜிப்கான்
3ம் வருடம்.. பொருளியல் சிறப்புகற்கை
கலைப்பீடம், கிழக்குபல்கலைக்கழகம், இலங்கை
வாழ்த்துக்கள்