அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம்
அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம் இது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். முஸ்லிம்களது ஜனாஸாக்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக எரித்தமை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா என்பது பாரதூரமான தொற்று நோய் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகம் முழுவதும் இந்நோய் இப்போது ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால் உலக சுகாதார ஸ்தாபனம் இந்நோய் தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றது.
இந்தவகையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒருவரை அடக்கம் செய்ய முடியும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலுக்கேற்ப மார்ச் 27 இல் இலங்கை அரசும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தது. எனினும் இதே இலங்கை அரசு மார்ச் 31 இல் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றி ஜனாஸாக்களை எரிக்கும் முடிவை எடுத்தது.

இது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசு தெளிவு படுத்த வேண்டும்.

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வரும் இலங்கை அரசு இந்த விடயத்தில் மட்டும் ஏன் சர்வதேச வழிகாட்டலை மீற வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
ஏனைய நாடுகள் கோரோனாவினால் இறப்பவர்களை அடக்கம் செய்யும் போது இலங்கையில் மட்டும் ஏன் இதனை செய்ய முடியாது?

முஸ்லிம்களது மத கலாசார விடயங்களை மீறி அரசு எடுத்த இந்த முடிவு குறித்து அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம்கள் இந்த விடயத்தில் என்ன சொல்லப் போகின்றார்கள்?
இவ்வாறான சூழ்நிலையில் எந்த அடிப்படையில் அரசுக்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க முடியும்? நிலையான ஆட்சிக்கு வர முன்னமே இந்த நிலை என்றால் நிலையான ஆட்சிக்கு வந்தால் நமது நிலை எப்படி இருக்கும்? என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவ படுத்துபவர்கள் தங்களது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும். இவர்களால் நமது மத உரிமைகள் விடயத்தில் இந்த அரசிடம் இருந்து நமக்கு எதனைப் பெற்றுத் தர முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source# Imran mahroof FB Page

Leave a Reply