கணித பாடம் கற்பித்தலின் மூலம் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித் அவர்களாவர். இவர் மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் – செய்யதும்மா தம்பதிகளின் புதல்வராக 1957.01.06ஆம் திகதி குச்சவெளியில் பிறந்தார்.

குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலயம், குச்சவெளி தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

1978 இல் கணித பாட உதவி ஆசிரியர் நியமனம் இவருக்கு கிடைத்தது. குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலயம், கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயம், ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம், குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம், அல்ஹிரா மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.

1982 – 83 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். அக்காலப் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களின் வகுப்புத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு திறம்பட செயற்பட்டுள்ளார்.

1990 இல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமாக நடந்தது. இதில் குச்சவெளியும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுள் இவரது குடும்பமும் அடங்கும். இவருக்கான தற்காலிக இணைப்பு கிண்ணியா அல் அக்ஸா கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

1991 இல் அல் அக்ஸாவில் கற்பித்த இவருக்கும், எனக்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தயார் படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த வருடம் அல் அக்ஸாவில் இருந்து 4 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தனர். 20 வருட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த சித்தி இதுவென்பதால் பாடசாலைச் சமுகத்தினால் இது பெரிதும் பாராட்டப்பட்டது.

1990 இல் இருந்து இவர் தனது நிரந்தர வசிப்பிடத்தை கிண்ணியாவுக்கு மாற்றிக் கொண்டார். அன்று முதல் இவருடனான எனது நட்பு தொடர்ந்து வந்திருக்கின்றது. உறவினர் போல நாங்கள் நெருக்கமாக இருந்தோம்.

கணித பாடத்தை மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் இவர் தனது கற்பித்தலில் நுட்பங்களைக் கையாண்டார். அதில் வெற்றியும் கண்டார்.

1994 முதல் 2002 வரை ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் இவர் கற்பித்தார். இது தமிழ் – முஸ்லிம் உறவில் சிறிது இடைவெளி நிலவிய காலப்பகுதி. எனினும், தனது கற்பித்தல் மூலம் அப்பகுதி மாணவர்களினதும், இளைஞர்களினதும் மனங்களில் இவர் இடம் பிடித்திருந்தார். இதனால் சுமார் எட்டரை வருடங்கள் இப்பாடசாலையில் இவரால் கற்பிக்க முடிந்தது.

2005 முதல் 2017 இல் ஓய்வு பெறும் வரை கிண்ணியா மத்திய கல்லூரியில் பணியாற்றிய இவர் சில வருடங்கள் இக்கல்லூரியின் உதவி அதிபராகவும் சேவையாற்றினார். அதிபர் எஸ்.ஏ.சராப்தீன் அவர்களின் நிர்வாகக் காலத்தில் இக்கல்லூரி ஓ.எல்.மாணவர்களுக்காக விசேட செயற்றிட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டது. இதில் கணித பாடத்தில் 35 க்கு குறைவாக புள்ளிபெறும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சித்தி பெற வைப்பதில் அரும்பங்காற்றி வெற்றி கண்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கணித பாட கருத்தரங்குகள் நடத்தியுள்ளார். இதனால் எல்லாப் பகுதிகளிலும் இவரிடம் கற்றோர் இருக்கின்றனர்.

கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்கள் மத்தியில் மரண ஆதாரச் சங்கம் தாபிப்பதில் இவரும் பெரும் பங்காற்றினார். இன்று இச்சங்கத்தில் வலயத்தின் பெரும்பாலான ஆசிரியர்கள் அங்கம் வகிக்கின்றனர். மரணிக்கின்ற அங்கத்தவர் குடும்பத்திற்கு 1 இலட்சம் ரூபா உதவு தொகை இச்சங்கத்தினால் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றது.

தனது ஓய்வுக்குப் பின்னர் கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற இவர் அங்கு தனது பணியை திறம்பட செய்துள்ளார்.

கிண்ணியா கல்வி வட்டம், SAW கல்வி நிலையம் என்பவற்றில் முக்கிய பங்கு வகித்த இவர் இவற்றின் மூலம் பல்வேறு கல்விப் பணிகள் புரிந்துள்ளார்.

மிகவும் அமைதியான போக்குள்ள இவர் தனது நடவடிக்கை மூலம் யாருடைய மனதும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக செயற்பட்டார். எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டார். நேர்மை, பணிவு என்பன இவரிடம் இருந்த பெருங்குணங்கள்

சபீனா ஆசிரியை இவரது வாழ்க்கைத்துணைவி. சபீன் (VTA போதனாசிரியர்), அஜீமா (பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்), அஜீம் (ICT உத்தியோகத்தர்) ஆகியோர் இவரது பிள்ளைகள்.

சிறிது சுகவீனமுற்ற நிலையில் கடந்த 2021.06.14 ஆம் திகதி இவர் காலமானார். அவரது பிறந்த ஊரான குச்சவெளி பொது மையவாடியில் இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறைவன், இவரது நற்செயல்கள் அனைத்தையும் ஏற்று, தவறுகளைப் பொறுத்து சுவனம் நுழைய அருள்பாலிப்பானாக.

-Copied-

By Admin

Leave a Reply