புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை சில நிபந்தனைகளின் அடிப்படையில் புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் கனிய மணல் அகழ்வுக்காக கல்வி அமைச்சின் செயலாளர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் கனிய மணல் அகழ்வுக்காக வழங்கியமை தொடர்பில் பொதுமக்களுக்குள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுள்ளார்.
மேலும் புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணி கனிய மணல் அகழ்வுக்காக 3 மாத காலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 மாத காலத்தின் பின் இந்தக் காணியை பாடசாலைக்கு மீள ஒப்படைக்க வேண்டும். இதன்போது மணல் அகழ்வுக்காக அகற்றப்படும் கட்டிடம் மீளமைக்கப் பட்டு காணி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமாக செப்பனிடப்பட்டு மீண்டும் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே இக்காணி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கனிய மணல் கூட்டுத்தாபனம் இந்த நிபந்தனைப்படி செயற்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் கனிய மணல் கூட்டுத்தாபனத்தினால் புடைவைக்கட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேலும் இது போன்று இந்த விடயத்திலும் ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. எனவே தங்களால் வங்கப்பட்ட நிபந்தனைகள் கனிய மணல் கூட்டுத்தாபனத்தினால் நிறைவேற்றப்பட வில்லையாயின் அதனை நிறைவேற்றச் செய்வதற்கு தாங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? எனவே இது குறித்து தங்களது தீர்மானத்தை பொதுமக்களுக்கு அறியத்தருமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.