சுதந்திர இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவமிக்க அரசியல் ஆளுமைகளில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடத்தக்கவராவார். இவரது அரசியல் தலைமைத்துவம் மற்றும் செயற்றிறன்களினால் மக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர்.
இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தேசிய அரசியலில் பிரகாசித்த ராஜபக்ஷ பரம்பரையைச் சேர்ந்தவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது தந்தையைப் போலவே நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் நேரடி அரசியலில் பிரவேசித்து அரை நூற்றாண்டு அதாவது 50வருடங்கள் நிறைவடைகின்றன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டிய மெதமுலனவில் முன்னாள் அரசியல் தலைவரும் அன்றைய அமைச்சருமான மறைந்த டி.ஏ. ராஜபக்ஷ மற்றும் திருமதி ராஜபக்ஷ தம்பதியினருக்கு 1945.11.18அன்று மகனாகப் பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, தமது ஆரம்பக் கல்வியை காலி ரிச்மண்ட் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு நாலந்தா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளிலும் கற்றார். இவர், 22வயது இளைஞராக இருந்த சந்தர்ப்பத்தில் அதாவது 1967ல் இவரது தந்தை டி.ஏ. ராஜபக்ஷ காலமானார்.
அக்காலப் பகுதியில் இவர் நேரடி அரசியலில் பிரவேசித்திருக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறைந்த தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பை ஏற்று அரசியலில் பிரவேசித்த இவர், 1970இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
இதனூடாக நேரடி அரசியல் வாழ்வை ஆரம்பித்த இவர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த இளம் வயதில் பாராளுமன்ற உறுப்பினரான பெருமையையும் பெற்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதேநேரம், இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்று 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தம் தந்தையின் வழியில் அரசியல் பயணத்தை தொடர்ந்த இவர், கஷ்டப்பட்ட ஏழை மக்களின் சுபீட்சத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை நசுக்கி அவர்களது உரிமைகளை மறுத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் கட்டவிழ்த்து விட்டது. இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய இவர், ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்தார். அவற்றில் மறியல் போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பாதையாத்திரைகள், மனித சங்கிலிப் போராட்டம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
இவர் 1983இல் ஷிரந்தி ராஜபக்ஷவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்ததோடு மூன்று ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார். 1988–89காலப் பகுதியில் நாட்டில் நிலவிய இளைஞர் கிளர்ச்சியை அடக்க அன்றைய ஐ.தே.க அரசாங்கம் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அந்நடவடிக்கைகளுக்கெதிராகவும் இவர் துணிந்து முன்னின்று குரல் கொடுத்தார்.
1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக முற்போக்கு சக்திகளை இணைத்துக் கொண்டு, இவர் முன்னெடுத்து வந்த ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் 1994இல் ஆட்சிபீடமேற பெரும் பக்கத்துணையாக அமைந்தது.
1994இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக இவர் நியமனம் பெற்றார். இந்நாட்டு தொழிலாளர்களது உரிமைகளையும் அவர்களது நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சாசனத்தை இவர் அறிமுகப்படுத்தினார்.
அதேநேரம், நவீன யுகத்துக்கு ஏற்ப இந்நாட்டு உழைக்கும் வர்க்கத்தினருக்கு பொருத்தமான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்கவென நாட்டில் பல பிரதேசங்களிலும் தொழில் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும் இவர் நடவடிக்கை எடுத்தார். வெளிநாடுகளில் இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இவர் செய்தார்.
1997இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பினூடாக இவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவ்வமைச்சினூடாக இந்நாட்டு மீனவர் சமூகத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களையும் இவர் முன்னெடுத்தார்.