நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் காப்புறுதி, மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்குதல், நிதியமைச்சு மூலம் மதுபான அனுமதி வழங்கியமை, மின்சார கொள்வனவு என அனைத்திலும் கொமிசன் பெற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். யார் ஊழல் மோசடியில் ஈடுபட்டாலும் அவர்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தும். அதற்கிணங்க சிலருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
நல்லாட்சி அரசாங்கம் 1500பில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. கடந்த அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் விமான சேவை நிறுவனத்துக்கு 115மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேபோன்று மின்சாரத்துறை உட்பட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.