கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு மொழிகளில் ஏஐ உடன் உரையாடலில் ஈடுபட முடியும். ஒரு நேரத்தில் ஒரு மொழியைப் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த கண்ணாடிகளில் தனிப்பட்ட ஆடியோ சிஸ்டம் உள்ளது. இதனால் கண்ணாடியை அணிபவருக்கு மட்டுமே ஆடியோ கேட்கும். ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். இதிலிருக்கும் கேமரா மூலம் நீங்கள் என்ன பார்கிறீர்களோ அதை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்யலாம்.

தற்போது இந்த கண்ணாடிகளில் இருக்கக்கூடிய மிக அற்புதமான ஏஐ செயல்பாடுகளை முயற்சிக்க, ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் மெட்டா ஏஐ அம்சம் ஆரம்ப சோதனைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஸ்மார்ட் கிளாஸை அணிந்து நீங்கள் பார்க்கும் ஒரு பொருளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்கள் கண்களுக்கு முன்பாகவே அதைப் பற்றிய தகவலை உங்களுக்கு வழங்கும்.

இதில் இருக்கக் கூடிய கேமரா மூலம் ஸ்மார்ட் கண்ணாடியில் இருக்கக்கூடிய ஏஐ அமைப்பு, அந்த பொருளை அடையாளம் கண்டு உங்களுக்கு தகவலை வழங்கும். இதேபோல், கண்ணாடி அணிந்திருக்கும் போது நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்டால், ஏஐ அசிஸ்டென்ட் மைக்ரோஃபோன் மூலம் நீங்கள் கேட்ட கேள்வியைப் புரிந்து கொண்டு பொருத்தமான தகவலை வழங்கலாம்.

இதற்கிடையில் மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு வீடியோவில் கண்ணாடியின் புதிய அம்சங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளார். இந்த கண்ணாடியின் ஆரம்ப விலையானது $299 (ரூ.24,868) ஆகும். இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply