திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் புதிதாக ஒரு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.  

திருகோணமலை – முல்லைத்தீவு வீதியில், திருகோணமலை நகரிலிருந்து வடபுறமாக 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாவற்சோலை கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வறிய மக்களே குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்கின்றன.   

நாவற்சோலையில் மக்களை குடியேற்றியபோது தொண்டு நிறுவனங்கள் அந்த கிராமத்தில் இரண்டு கிணறுகளை பொது மக்கள் பாவனைக்காக அமைத்துக் கொடுத்தன. 

அப்போதிருந்து அந்த கிணறுகளின் ஊடாகவே அவ்வூர் மக்கள் தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துவந்தனர். எனினும், தற்போது இந்த கிணறுகளில் ஊறும் நீர், அங்குள்ள மக்களது நீர்த் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதே பெரும் பிரச்சினையாகும்.

இந்த சூழ்நிலையிலேயே குச்சவெளி பிரதேச செயலாளர், இவ்வூர் மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஒரு கிணறு அமைத்துத் தருமாறு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின் பிரகாரம், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 15 இலட்சம் ரூபா செலவில் 24 அடி ஆழமும் 18 அடி விட்டமும் கொண்ட கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. அந்த கிணற்றை குச்சவெளி பிரதேச செயலாளர் இன்று பார்வையிட்டார்.  

இக்கிணற்றை அமைப்பதற்கான நிதியை கனடாவில் வாழும் நக்கீரன் என்கிற வேலுப்பிள்ளை தங்கவேலு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Pathivu news)

By Admin

Leave a Reply