கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தவும், சுத்தமாக இருக்கவும்… இவை கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.
ஆனால், இதே விதிமுறைகள் அடங்கிய கையேடு ஒன்று லண்டனில் 1665ஆம் ஆண்டே வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆம், அந்த காலகட்டத்தில் பிளேக் என்னும் கொடிய கொள்ளை நோய் பரவிய நேரத்தில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால், இன்று கொரோனா பரவலைத் தவிர்க்க என்னென்ன விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அதே விதிமுறைகள்தான் அன்றும் பிளேக் நோயைத் தவிர்ப்பதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
10 பக்கங்கள் கொண்ட அந்த கையேடும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், உடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவும், தெருக்களை நன்கு சுத்தம் செய்யவும் அறிவுறுத்துகிறது.
வெளிநாடுகளிலிருந்து நோய் பரவுவதைத் தவிர்க்க, வெளிநாட்டிலிருந்து வருவோர் 40 நாட்கள் தங்களை கப்பலிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அப்போது வாசனை திரவியங்கள் மற்றும் அத்திப்பழ மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் பிளேக் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது போரிஸ் ஜான்சன் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவித்துள்ள விதிமுறைகளைப்போலவே அந்த கையேட்டில் உள்ள விதிமுறைகளும் இருப்பது உண்மையாகவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-தகவல் : தின தந்தி செய்திகள்