கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைப்பதற்க்கு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
இரணைதீவுப் பகுதியை நான் நன்கு அறிவேன். தற்போது தான் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அங்கு ஆரம்பித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பிற்கு அதிகளவு முகம் கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தவர்கள் இரணைதீவு மக்களே. இந்த நிலையில் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் நிலைமையே இந்த நடவடிக்கையாகும் எனவும் தெரிவித்தார்.
இரணைதீவு கடல் சூழ்ந்த பகுதி என்பதால், மழைக்காலங்களில் உடல்கள் மேலும் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த தீர்மானம் முற்றிலுமாக தவராகும்.
முஸ்லீம்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் இருக்கின்றன அதில் ஒரு இடத்தை தெரிவு செய்திருக்கலாம்.
ஆகவே அரசு இவ்விடயத்தில் முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இரணைதீவை தவிர்த்து பொருத்தமான வேறொரு இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.