உலகம் முன்னேறி சென்றாலும் நாம் அதே இடத்தில் இருக்கிறோம் ?
நவீனங்கள் மின்னல் வேகத்தில் நகர்கிறது, நமது அண்டைய நாடுகள் எல்லாம் முன்னேறி கொண்டே செல்கிறது .. நாம் மட்டும் ஏன் அங்கேயே நிற்கிறோம்?
இருபது வருடங்களுக்கு முன்னர் உள்ள அதே குடும்ப பொருளாதாரம், அதே கஷ்டம், அதே வறுமை, அதே கல்வி, அதே சுகாதாரம் இப்படி எல்லாமே அதே நிலைமையில் இருப்பதை ஏன் நாம் கண்டுகொள்வதில்லை?
நமது சமூகத்தில் பல பிரச்சனைகள் அப்படியே தானே இருக்கிறது, அவைகளை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்?
பிரச்சனைகளையும் அவைகளை தீர்ப்பதற்கான வழிகளையும் கண்டறிந்து முறையாக செயல்பட்டால் மாத்திரமே எம்மால் வெற்றி பெற முடியும்!
ஒரு சில முக்கிய பிரச்சனைகளை மாத்திரம் இங்கு தருகிறேன்
- காலா காலம் கஷ்டத்தில் மட்டுமே வாழ்கிறது நமது குடும்பம்.
- பத்தாம் ஆண்டு பாஸ் ஆனா உடனே முடிந்து போகிறது நமது இளைஞர்களின் படிப்பு, அதனை தொடர்ந்து கடலை மட்டுமே நம்பி மீனவனாக மாறுகிறார்கள் கொஞ்சம் பேர் விவசாயியாக போகிறார்கள் மீதிப்பேர்
- போதை பாவனைக்கு பலியாகிறது இளைய சமூகம்
- சரியான வழிகாட்டல் இல்லை
- கல்விக்கான வளங்கள் இல்லை
- படிப்பதற்கு கூட பொருளாதாரம் இல்லை
- இயற்கை அனர்த்தங்கள் வந்தால் அரசியல் வாதிகளையும் தனவந்தர்களையும் எதிர்பார்த்து நிற்கிறோம், முறையான திட்டமிடல் இல்லை
- விதவைகளுக்கு உதவி இல்லை, மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பற்றி சமூக தலைமைகள் சிந்திப்பதில்லை அதே போன்று ஏழைகளை கண்டு கொள்வதில்லை, ஆனால் இயற்கை அனர்த்தங்களின் போது சில நாள் உணவுக்காக உதவுகிறோம் – சில குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதுமே அனர்த்த நாளாக இருக்கிறது
- பொருளாதார நெருக்கடிகளில் உதவி செய்ய பைத்துல்மால் எனும் பொது நிதிய முறைமை இல்லை!
நம்மிடம் என்ன இல்லை?
நமது கிராமத்தில் நல்ல தலை சிறந்த அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள், நல்ல அனுபவமிக்க ஆசிரியர்கள் ஆசிரியைகள் இருக்கிறார்கள், குச்சவெளி பிரதேச எல்லைக்குள் அதிகூடிய உலமாக்கள் குச்சவெளியில் தான் இருக்கிறார்கள், நல்ல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் இப்படி எல்லா துறையிலும் தேர்ச்சிபெற்றவர்கள் எமது மண்ணில் இருந்தும் நாம் ஏன் இன்னும் பழைய நிலைமையில் மாற்றமே இன்றி அசையாமல் நிட்கிறோம்?
கல்வி ஒன்றே தீர்வு
கல்வி என்ற கருவியே மனித முன்னேற்றத்தில் முன்னிலை வகிக்கிறது, ஆதி மனிதன் ஆதம் நபியை படைத்த அல்லாஹ் அவர்களை கல்வியின் மூலமாகவே கண்ணியப்படுத்தி மலக்குகள் மத்தியில் சிறப்பித்துக் காட்டியதை அல்குர்ஆன் மூலம் நாம் படிக்க முடிகிறது.
சூரத்துல் பகரா 2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக் காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
எனவே மலக்குகள் மத்தியில் மனிதனை அல்லாஹ் மகிமைப்படுத்த எல்லாப் பொருட்களின் பெயரையும் அல்லாஹ்வே கற்றுக் கொடுத்தான், இப்படியான கற்றல் என்ற செயலின் மூலம் மனிதனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை புரிய முடிகிறது.
“கல்வி” என்ற தமிழ்ச் சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகிறது என செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் பக்கம் 504ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறியாமை என்னும் இருளை நீக்கும் அனையாத ஒளியே கல்வி, இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் எனில் உலகில் உள்ள அம்சங்களின் அடிப்படை ஆணிவேர் கல்வி என்பதில் தான் தங்கி இருக்கிறது. தெளிவின்மை, கற்பனை, கட்டுக்கதை, வதந்தி, போலி இப்படியான விடயங்களில் இருந்து விடுபட கல்வி என்ற ஒளி கட்டாயமான ஒன்றாகும்.
கல்வியின் மகிமையைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இங்கு நமது நோக்கம் அதுவல்ல. மாறாக, நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக நமது கவனத்தை செலுத்துவோம்.
எமது சமூகத்தில் காலா காலம் இருக்கும் பிரச்சனைகளில் தலைமை வகிப்பது வறுமை என்ற அரக்கன் மட்டுமே !
வறுமையை ஒட்டுமொத்தமாக அளிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் அதன் தாக்கத்தை தனித்து வெற்றி கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கையில் “கல்வியால் மாற்றுவோம்” என்ற இந்த செயற் திட்டம் ஒன்றை உங்கள் முன் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்.
சமூக நலன்கருதி பத்து வருடத்தில் “வீட்டுக்கு ஒரு பட்டதாரி” (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் தலைமை தாங்கி வழிநடத்தும் ஆளுமை கொண்ட தலைவரை உருவாக்கும் உயர்ந்த திட்டம் ஒன்றை வகுத்துள்ளேன்.
எதிர் வரும் 08 வருட காலத்துக்குள் வீட்டு ஒரு பட்டதாரியை உருவாக்குவதன் (A graduate at every home) மூலமே குடும்ப பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும். “வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவது என்பது அவ்வளவு சாதாரண விடயமா?” என உங்கள் உள்ளத்தில் எழும் கேள்வி புரிகிறது !! அதனால் தான் நான் முன்னர் கூறினேன் “நம்மிடம் என்ன தான் இல்லை”? இலக்கு தெளிவாக இருந்தால் பயணிப்பது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. உங்கள் வீட்டில் யார் அந்த பட்டதாரி என நீங்களே தீர்ந்தமானியுங்கள்!! உங்கள் வீட்டில் உருவாக போகும் ஒரு பட்டதாரி நம்மில் நிலையாக இருக்கும் பல பிரச்சனைகளுக்கு பதிலாக வருவார் என்று நம்புவோம் !
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கண்காணிப்பு : உங்கள் குழந்தைகளை உங்களின் கண்காணிப்புக்குள் கொண்டு வாருங்கள், ஒவ்வொரு நாளும் பாடசாலையில் படித்த விடயங்களை பரிசீலனை செய்யுங்கள், அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். இஷா தொழுகைக்கு பின்னர் எந்தக்காரணத்துக்காகவும் தொலைபேசி பாவிக்க அனுமதிக்கவே கூடாது அதே நேரம் உங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள்
- வீட்டில் நாடகம், திரைப்படம் பார்ப்பதை பெற்றோர்கள் முழுமையாக நிறுத்துங்கள்
- உங்கள் குழந்தைகளுக்கென வாராந்த மற்றும் மாதாந்த (target) கற்றலின் இலக்கை உருவாக்குங்கள் –
உங்கள் குழந்தையின் வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களோடு வாரம் ஒருமுறை சந்தித்து கலந்துரையாடுங்கள், உங்கள் குழந்தையின் கற்றல் செயட்பாட்டில் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து சரியான நிலையை தெரிந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஆசிரியரோடு ஆலோசித்து தீர்வுகளை தேர்ந்தெடுங்கள் - உங்கள் குழந்தை 05 நேரம் தவறாமல் தொழுகையை நிலை நாட்ட நீங்களே அவர்களை பள்ளிவாயலுக்கு அழைத்து செல்லுங்கள் (பெண் குழந்தைகளை வீட்டில் தாயோடு தொழும் வலக்கத்தை உருவாக்குங்கள்)
- உங்கள் மேலதிக ஆலோசனைகளை கட்டாயம் பகிருங்கள்!
ஆரம்ப கட்டமாக இந்த விடயங்களை நீங்கள் செய்தாலே போதும், வீட்டுக்கு ஒரு பட்டதாரி தொடர்பான எமது ஏனைய விபாரங்களை மிக விரைவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ் !