குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக
வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த வன்முறைகளில் சுமார் 120 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.

கோகுல்புரி பகுதியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் மீட் நகர் அருகில் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ணக் கொடி ஏந்தியபடி வீதியில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டு சென்றதாகவும் அவர்களில் சிலர் காவி நிற கொடிகளுடன் சென்றதாகவும் BBC செய்தியாளர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சாந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நேற்று (24) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், டெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகவும் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை இன்று காலை கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்,
அமைதி காக்க வேண்டுமென டெல்லி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். வட கிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கவலை கொண்டுள்ளோம். இந்த வன்முறை சம்பவத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் இறந்துள்ளனர்.

பல கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply