சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் நாளை (09) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களின் அழைப்பின் பேரில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இந்த இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தைஉறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு இந்த ஒன்றியத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளேயினால் சபையில் முன்வைக்கப்படும்.
“பெண்களை வலுவூட்டும் சவாலுக்கு நீங்கள் தயாரா?” என்ற தொனிப்பொருளில் குழுக் கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரான ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் விட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பனர்னாந்துபுள்ளே, துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஹினி குமாரி விஜேரட்ன ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, கீதா குமாரசிங்ஹ, மஞ்சுளா திஸாநாயக்க, டயானா கமகே ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
“பெண்கள் ஒரு நாடு, பெண்கள் ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் இரண்டாவது குழுக் கலந்துரையாடல் இடம்பெறும். இதில் ஒன்றியத்தின் இணைத் தலைவர் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துறை இராஜாங்க அமைச்சர் வைத்தியலாநிதி சீதா அரம்பேபொல, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முதிதா பிரிசாந்தி, ராஜிகா விக்ரமசிங்ஹ, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொள்வர்.
பணிப்பாளர் (தொடர்பாடல்)
இலங்கை பாராளுமன்றம்